RightClick

வைஷ்ணவ வழிபாடு பிறந்த புராதன வரலாறு


வெகுகாலத்துக்கு முன்பு,(சிலபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து படைக்கும் கடவுளாகிய அயன்(நான்முகன் எனப்படும் பிரம்மா) பிறந்தார்.பிறந்ததுமே,அகங்காரத்தால்,தனது தந்தையாகிய மஹாவிஷ்ணுவை வம்புக்கிழுத்தார்;அதன் விளைவாக இருவருக்கும் போர் உண்டானது.இந்த போர் நடக்குமிடத்தில் திடீரென ஒரு நெருப்பு வானுக்கும் பூமிக்கும் உண்டானது.திடீரென இவ்வாறு ஒரு நெருப்பு  உண்டானதால்,அவர்களின் போர் நின்றது;யார் இந்த நெருப்பின் அடியையும் முடியையும் முதலில் பார்க்கிறார்களோ,அவர்களே போரில் வென்றவர்கள் என்று சவால் விட்டனர்.
இந்த சவாலின் விளைவாக பறவை வடிவமெடுத்து பிரம்மா மேலே பறக்கத் துவங்கினார்;மஹாவிஷ்ணுவோ வராகம்(பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டியவாறு பாதாளம் நோக்கிச் சென்றார்.பல கோடி ஆண்டுகளாகியும்,இருவராலும் அடியையும்,முடியையும் பார்க்க முடியவில்லை;இந்த சூழ்நிலையில் பறவையாக மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த பிரம்மாவை ஒரு தாழம்பூ கடந்து சென்றது(கீழே விழுந்துகொண்டிருந்தது)உடனே,இருவரும் பேசினார்கள்.அதன்படி,
பிரம்மா,தாழம்பூவே நீ எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டார்.தாழம்பூ, “நான் இந்த நெருப்பின் உச்சியிலிருந்து வருகிறேன்”என்றது.
பிரம்மா, “இந்த நெருப்பின் உச்சியிலிருந்து எப்போது நீ விழத் தொடங்கினாய்?” எனக் கேட்டார்.
அதற்கு அந்த தாழம்பூ சொன்ன பதிலைக் கேட்டு,பிரம்மாவுக்கு தலை சுற்றியது.பிரம்மா இதுவரை எத்தனை கோடி வருடங்கள் பயணித்தாரோ,அதைவிட பல கோடி மடங்கு வருடங்களை அந்த தாழம்பூ சொன்னது.
தாழம்பூ பிரம்மாவிடம் கேட்டது: எதற்காக இதைக் கேட்கிறீர்கள்?
பிரம்மா தனக்கும்,திருமாலுக்கும் நடந்த போரைப் பற்றியும்,அப்போது உண்டான இந்த நெருப்பு பற்றியும் விவரித்து,பிரம்மா தாழம்பூவிடம் ஒரு உதவி கேட்டார்.
அதன்படி,பிரம்மா,இந்த நெருப்பின் முடியை தரிசித்தார்;அப்படி தரிசித்ததை நான் பார்த்தேன் என்று தாழம்பூ சொல்ல வேண்டும் என்பது முடிவானது.இருவரும் மீண்டும் கீழ் நோக்கிப் பயணித்தனர்.வராக அவதாரம் எடுத்த திருமாலிடம் நடந்ததை(பொய்) கூறினர்.இதன்விளைவாக,திருமால்  தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பிரம்மாவை துதித்து வழிபடத் துவங்கினார்.அப்போது அந்த நெருப்பு மறைந்து சதாசிவன் தோன்றினார்.அந்த நெருப்பு தோன்றிய இடமே அண்ணாமலை.எழுதப்படாத பிரபஞ்சவரலாற்றுக்கும் முன்பிருந்தே இந்த திரு அண்ணாமலை இருந்து வருகிறது என்பதற்கு இந்த வரலாறு ஆதாரம் என எடுத்துக்கொள்ளலாம்.
பொய் சொன்ன தாழம்பூவுக்கு சாபமளித்தார்.இனிமேல் நீ எந்த தெய்வ வழிபாட்டுக்கும் உதவமாட்டாய்.
பொய் சொல்லத் தூண்டிய பிரம்மாவுக்கு, உனக்கு பூவுலகத்தில் வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சாபமும்,தனது படைப்பாகிய பைரவரிடம்,பொய் சொல்லத் தூண்டிய பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளும்படி உத்தரவிட்டார்.
அவ்வாறு கிள்ளியதும்,மஹாவிஷ்ணு சதாசிவனிடம்,பிரம்மாவின் சார்பாக மன்னிப்புக் கேட்டார்.என்னதான் இருந்தாலும் பிரம்மா எனது மகன்! எனவே,தாங்கள் பெருந்தன்மையோடு பிரம்மாவை மன்னிக்க வேண்டும் என வேண்டி,பலவிதமாக சதாசிவனை துதித்தார்.
இதனால் பெருமகிழ்ச்சியடைந்த சதாசிவன்,மஹாவிஷ்ணுவுக்கு பல வரங்களை தந்தருளினார்.அதில் ஒன்றுதான்
“இனி பூலோகத்தில் உன்னையும் வழிபடுவார்கள்” என வரம் தந்தருளினார்.ஆதாரம்:சிவமஹாபுராணம்,வித்யேஸ்வர சம்ஹிதை,பக்கங்கள்1114,1115,1116.
பைரவர்களில் ஸ்ரீகுரோதன பைரவர் முக்கியமானவர் ஆவார்.இவரே ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு சங்கு சக்கரங்களையும்,கருட வாகனத்தையும் வழங்கியவர்.ஸ்ரீமஹாவிஷ்ணு வழங்கும் அனைத்து வரங்களையும் அருள்பவர்.அஷ்டலட்சுமிகளின் கடாட்சத்தையும்,கர்ண எட்சிணி முதல் அஷ்ட எட்சிணி வசியங்களையும் உபாசிப்பவனுக்கு அருள்பவர்.அஷ்ட வீரட்டான பைரவ ஸ்தலங்களில் திருவிற்குடியில் ஸ்ரீ குரோதன பைரவர் அருளாட்சிபுரிந்துவருகிறார்.இந்த ஊர் திருவாரூர் டூ நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கிறது.இந்த கோவில் மேற்கு நோக்கிய திருக்கோவில் ஆகும்.இங்கு ஸ்ரீகுரோதன பைரவர் சிவலிங்க வடிவத்தில்,ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
இங்குதான் மஹாவிஷ்ணு தவமிருந்து,ஸ்ரீகுரோதன பைரவரிடமிருந்து சங்கு சக்கரங்களைப் பெற்றார்.இதனால் தான் இங்கு மட்டும் பைரவருக்கு துளசிமாலையால் அர்ச்சனை நடைபெற்றுவருகிறது.ஸ்ரீமஹாலட்சுமி சன்னதியும் இங்கு சிறந்து விளங்குகிறது.
ஸ்ரீபைரவரின் அஷ்டோத்திர சத நாமாவளியில் 108 வது போற்றியாக ஸ்ரீவிஷ்ணவே என்று வரும்.இந்த ஸ்ரீவிஷ்ணவே போற்றி என்பது ஸ்ரீகுரோதன பைரவரைக் குறிக்கிறது.ஸ்ரீபைரவரின் 1008 போற்றியிலும் ‘ராமாய’ ,லக்ஷ்மிதராய,ஹரிநாம பாராணாய,நாராயணாய,கோபாலாய,க்ருஷ்ணாய என வருவதெல்லாம் ஸ்ரீகுரோதன போற்றியே ஆகும்.
ஸ்ரீகுரோதன பைரவரின் தியானம்:
திரிநேத்ரம் குமாரம் வரதம் சாந்தம் திகம்பரம்!
கதாம் ச சக்கரஞ்ச பான பாத்ரஞ் ச தாரிணம்!!
லக்ஷ்ம்யாச ஸகிதம் வாமே கருடாஸந ஸீஸ்ய்த்திதம்!
நீல வர்ணம் மஹா தேவம் வந்தே ஸ்ரீக்ரோத பைரவம்!!
இதன்பொருள்: மூன்று கண்களையுடையவர்;இளமையான தோற்றமுடையவர்;வேண்டிய வரங்களை வாரி வாரி வழங்குபவர்;சாந்தமான சொரூபர்;நிர்வாண ரூபமுடையவர்;கதை,சங்கு,சக்கரம்,கபால பான பாத்திரங்களை கரங்களில் ஏந்தி அருள்பவர்;கருட வாகனராய் ஸ்ரீ இலக்குமி தேவியுடன் எழுந்தருள்பவர்;நீல வண்ண மேனியரான ஸ்ரீகுரோதன பைரவரை வணங்குகிறேன்.
அஷ்ட லட்சுமிகளின் கடாட்சத்தை அள்ளி வழங்கும் குரோதன பைரவரை வெள்ளிக்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வெள்ளிக்கிழமையும்,பவுர்ணமியும்; வெள்ளிக்கிழமையும் அஷ்டமியும் சேர்ந்து வரும் திருஓண(சிராவண) நட்சத்திர நாட்களில் உபாசித்து விரதமிருந்து வந்தால்,வறுமை என்பது ஒருபோதும் வராது.
நன்றி:பைரவ ரகசியம் பகுதி1,பக்கங்கள்
 4,5,16,17.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ