RightClick

மஹா பைரவர் விரதம் இருப்பது எப்படி?நாம் வாழும் பூமியானது கர்ம பூமியாகும்;கர்ம பூமியென்றால்,பூமிக்கு மேலே ஏழு  உலகங்களும்,பூமிக்குக் கீழே ஏழு உலகங்களும் உள்ளன.இந்த பதினான்கு உலகங்களுமே போக உலகம் ஆகும்.அப்படியென்றால்,நாம் கர்மபூமி எனப்படும் நமது பூமியில் நாம் செய்யும் நற்காரியங்களுக்கும்,தீயக் காரியங்களுக்கும் ஏற்றவாறு நாம் இறந்தப்பின்னர்,இந்த பதினான்கு உலகங்களில் ஏதாவது ஒன்றில் பிறப்போம்;அல்லது மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்போம்;நாம் பிறருக்கு உதவி செய்தல்,அன்னதானம் செய்தல்,கோவில்களில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தல்,பக்தியை பிறருக்கு உருவாக்குதல்,நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு பண உதவி அல்லது கருத்து உதவி அல்லது ஆலோசனை உதவி செய்தல் போன்றவைகளைச் செய்தால்,நாம் செய்யும் புண்ணியத்தின் அளவுக்கேற்ப பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஒன்றில் சிறிதுகாலம்(பல நூறு ஆண்டுகள்) வாழ்ந்து வருவோம்;அப்படி வாழ்ந்து,நமது பூர்வ புண்ணியங்கள் தீர்ந்ததும்,மீண்டும் இந்த பூமியில் பிறப்போம்;அப்படிப் பிறக்கும்போது பெரும் செல்வந்தராகவும்,ஆன்மீக விஷயத்தில் அளவற்ற ஈடுபாட்டுடனும் பிறப்போம்.(நமது கல்வி ஏழு பிறவிக்கும் கூடவே வரும் என இந்து சாஸ்திரங்கள் கூறியிருப்பது இதைத்தான்!)அடுத்த குடும்பத்தைக் கெடுத்தல்,ஒற்றுமையான கணவன் மனைவியை தந்திரமாகப் பிரித்தல்(இந்தக்காலத்தில் அந்த கணவனின் பெற்றோரே/மனைவியின் பெற்றோரே பிரிப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்),அப்பாவிகளை ஏமாற்றி அவர்களின் வீட்டை/சொத்தை எழுதி வாங்குதல்,பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்தல்,ஈவிரக்கம் பார்க்காமல் பணத்தைக் குவிப்பதையே குறியாக இருத்தல்,தனக்கு மிஞ்சியதே தானம் என்று தெரிந்தும் கூட,தன்னால் தனது ரத்த உறவுகளுக்கு உதவி செய்ய முடியும் என்று தெரிந்தும் கூட உதவாமல் இருத்தல்,பிறரைப் பற்றி கேவலமாகப்பேசுதல், பிறரின் காம அவமானங்களை பிரபலப்படுத்துதல், பிறரின் தாம்பத்திய ரகசியங்களை(இக்காலத்தில் வீடியோ எடுத்து) வெளியிடுதல்,தன்னை விட தனது குழந்தைகள் கூட  புகழடைந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுதல்,பிறரின் அக்கிரமங்களைத் தடுக்க முடியும் சக்தியிருந்தும் வேடிக்கை பார்த்தல் வீம்புக்கென்றே பிறரின் செல்வாக்கைப் பயன்படுத்தி,இருவரின் நல்லுறவைப் பாழாக்குதல்; சுருக்கமாக அடுத்தவரை மனதால்,உடலால் நோகடித்தல் அல்லது சாகடித்தல் அல்லது சாவுக்குச் சமமாக சித்ரவதை செய்தல் போன்றவைகளில் ஏதாவது செய்தால்,மிகவும் இழிவான பிறப்பாக பிறக்க வேண்டியிருக்கும்.
இந்த சூழ்நிலையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே மனம் திருந்துவதற்கு சந்தர்ப்பத்தை கடவுள் அடிக்கடி உருவாக்கித்  தருகிறார்.அப்படி உருவாக்கித் தரும்போது, அதை முறையாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொண்டு தன்னை கர்மவினைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது ஒருசிலர் மட்டுமே !
எந்தக் கடவுளைக் கும்பிட்டால்,நமது கர்மவினை அடியோடு விலகும்?
நமது மனிதர்களைவிடவும்,மகான்கள் சக்தி வாய்ந்தவர்கள்;அவர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்வது சிவ வழிபாடே தான்!!!(தொடர்ச்சியான ஓராண்டு ஜீவசமாதி வழிபாடு,நம்மை பைரவ வழிபாட்டுக்குக்கொண்டு செல்லும்)
மகான்களை விடவும் சித்தர்கள் சக்தி வாய்ந்தவர்கள்;சித்தர்களின் ஜீவசமாதிகளை சென்று அடிக்கடி வழிபடலாம்;
சித்தர்களை விடவும் நவக்கிரகங்கள் சக்தி வாய்ந்தவை;நவக்கிரகங்களை விடவும் அவைகளை இயக்கும் பெருமாள் என்ற மஹாவிஷ்ணு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மஹாவிஷ்ணுவை வழிபட,வழிபட நமது செல்வ வளம் பெருகும்.
மஹாவிஷ்ணு வழிபாட்டின் ஒரு அம்சமே குபேர பூஜை,குபேர கிரிவலம்,மஹா லட்சுமி வழிபாடு,மஹாலட்சுமியாகம்,சத்திய நாராயண பூஜை போன்றவைகளும்,ஸ்ரீராமஜெயம் எழுதுவதும்,ராமாயணம் படிப்பதும்.
மஹாவிஷ்ணு வழிபாட்டை விட உயர்ந்த வழிபாடு எனில் சிவ வழிபாடு ஆகும்.போதுமான மனப்பக்குவமும்,முதிர்ந்த ஞானமும் உள்ளவர்களே இந்த வழிபாட்டைப் பின்பற்ற முடியும்.பெரும்பாலான சிவவழிபாட்டு முறைகள் குப்தக்கலையாகவே இருக்கின்றன.குப்தக் கலை என்றால் ரகசியக்கலை என்றே பொருள்.சிவ வழிபாட்டு முறைகளில் மிகவும் ரகசியமானதே பைரவர் வழிபாட்டு முறை ஆகும்.
யார் நீதி நேர்மை தர்மம் நியாயம் என்று வாழ விரும்புகிறார்களோ,அவர்கள் மட்டுமே பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியும்.வேறு யாராலும் பைரவர் வழிபாட்டுமுறையைப் பின்பற்றிட முடியாது.

நீங்கள் பைரவ வழிபாட்டை தொடர்ந்து செய்து வர, உங்களின் கர்மவினைகள் விரைவாக நீங்கும்;அதே சமயம் உங்களின் வருமானம்/லாபம் படிப்படியாக பெருகத் துவங்கும்;நல்லவர் மாதிரி நடிப்பவர்கள்,நியாயப்படி நடப்பதுபோல சீன் போடுபவர்களால் மாதம் தவறாமல் ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு/தினமும் கால பைரவர் வழிபாடு செய்ய முடியாது.இது அனுபவ உண்மை.
மஹா பைரவர் விரதம் இருக்கும் முறையை நமக்கு கொல்லிமலைச் சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர்  சுவாமிகள் அருளியிருக்கிறார்.இவர் திரு அண்ணாமலையில் வாழ்ந்து வருகிறார்.இந்த முறையை உங்களுக்கு அறிவிப்பதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
1.உங்கள் பெயர்,முகவரி விபரங்களை காகா ஆஸ்ரமத்தில் பதிவு செய்ய வேண்டும்(முகவரி:காகா ஆஸ்ரமம்,காஞ்சி சாலை,பெரிய குளம்,திரு அண்ணாமலை)
2.உங்களுக்கு ஸ்ரீபைரவர் மாலை இடப்படும்;இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
3.நீங்கள் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
4.இந்த 48 நாட்களுக்கு மது,மாமிசம்,புகை மற்றும் உடலுறவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
5.தினசரி ஸ்ரீபைரவரை (உங்கள்  ஊரில் இருக்கும் சிவாலயத்தில்) வழிபட வேண்டும்.
6.வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்.
7.இயன்றவரையிலும் பைரவரை வழிபடுபவர்கள் கூட்டு வழிபாடு செய்யலாம்.
8.தினமும் அதிகாலை 4.30க்கு எழுந்து குளித்துவிட்டு,பைரவர் மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.(இந்த 48 நாட்களும்)
9.மாலை 6மணிக்கு மேல் 11 மணிக்குள் பைரவர் மூலமந்திரம் அல்லது பைரவர் 108 போற்றிகளை ஜபிக்க வேண்டும்.
10.சுத்தமான உணவு,ஹோட்டல் உணவைத் தவிர்த்தல்,அமைதியாக அடிக்கடி(ஒவ்வொரு நாளிலும் பலமுறை) தியானம் செய்தல்,தேவாரம்,திருவாசகம் பாடுதல்,சத் சங்கம் எனப்படும் கூட்டு வழிபாடு செய்தல் விரைவான,சக்திவாய்ந்த பலனைத் தரும்.
11.47 நாட்கள் நிறைவடைந்து 48 ஆம் நாள் காகா ஆஸ்ரமம் வந்தால் கர்ப்பக் கிருகத்துக்குள் நுழைந்து இருமுடியை பைரவருக்குப் படைத்து நீங்களே பூஜை செய்யலாம்.
12.எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை;(உங்களுக்கு விருப்பமிருந்தால்,அன்னதானம்,திருப்பணி,பூஜைச் செலவுக்காக நன்கொடை தரலாம்.இது கட்டாயமில்லை)
13.அஷ்டமியன்று காகாஸ்ரமத்தில் நடைபெறும் ஹோமம்,வழிபாடுகளில் கலந்து கொள்வது நல்லது.(மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)
14.ஏழைகளுக்கு உதவினால்,பைரவருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.அவரது அருள் விரைவாகக் கிடைக்கும்.
15.பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு வேளை உணவு உண்டு,அன்று பைரவரின் மந்திரங்கள்,போற்றிகளை வீட்டில் பாடலாம்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ