RightClick

இயற்கைப் பேரழிவிலிருந்து நமது பூமியைக் காக்கவும்,உலக அமைதியை வலுப்படுத்தவும் ஆன்மீகக்கடல் வாசகர்களின் மூன்றாவது ஆன்மீகப்பயணம்
கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நவக்கிரகங்களில் பெரும்பாலானவை முறையாக இயங்க வில்லை;ஜோதிடத்தின் அடிப்படையை அறிந்தவர்களுக்கு இது சுலபமாகப் புரியும்.ஒரு ராசியில் ஒருவருடம் வரை குருபகவான் பயணிப்பார்;ஒரு ராசியில் இரண்டரை வருடம் வரை சனிபகவான் பயணிப்பார்;ஒரு ராசியை 45 நாட்களில் செவ்வாய்பகவான் கடந்துசெல்லுவார்;ஆனால்,இந்த நடைமுறை கி.பி.2002க்குப் பிறகு செயல்படவில்லை;இதற்கு பலப்பல சூட்சுமமான காரணங்கள் உள்ளன;அவைகளை பட்டும்படாமலும் நமது ஆன்மீகக்கடலில் பல பதிவுகளாக வெளியிட்டிருக்கிறோம்;

இந்த வருடம் கி.பி.2012 !!! ஏராளமான அழிவுகள்,நமது பூமிக்கு இயற்கைச் சீற்றங்களால் ஏற்படப்போகின்றன.அந்த சீற்றங்களால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கப்படப் போகிறோம்;கோடிகளை வைத்திருப்போரால் மட்டும் தப்பிக்க முடியாது;ஆத்ம பலம் எனப்படும் தெய்வபக்தி,சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம்,நியாயமான வாழ்க்கை போன்றவைகளால் இந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு.அப்படிப்பட்ட வாய்ப்பை,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் அருளாணைப்படி,ஆன்மீகக்கடல் வாசக,வாசகியருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

வருடம் தோறும் வரும் சிவராத்திரியன்று சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது நமது மரபு;பல லட்சம் வருடங்களாக நாம் சிவனை வழிபட்டுவருகிறோம்;கலியுகத்தில் ,இது சிறிது மாறி சிவராத்திரியன்று நமது குலதெய்வம் கோவிலுக்கு நாம் செல்வது வழக்கம்;சிவராத்திரி முழுவதும் தூங்காமல் இருந்து,சிவனை வழிபட்டு,மறுநாள் பகல் முழுவதும் தூங்காமல் இருந்தால் அது மிகப்பெரிய புண்ணியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம்;ஒருவேளை அப்படி மறுநாள் பகலில் தூங்கினால்,நாம் தூங்கியதும் சிவகணங்கள் நமது புண்ணியத்தை எடுத்துச் சென்று விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்;

ஆனால்,சிவராத்திரி இரவுகளில் சித்தர்பீடங்கள்,ஜீவசமாதிகள்கூகுள்(1க்குப் பின்னால் 100 சைபர்கள்) கோடி மடங்கு சக்தியுடன் திகழும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.சிவராத்திரி இரவு முழுவதும் நாம் ஏதாவது ஒரு சித்தர்பீடத்திலோ அல்லது ஜீவசமாதியிலோ நமது மூச்சைக் கவனித்தவாறு தியானித்தால்,நமது பல வருட பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த சிவ ரகசியம் ஆகும்.இவ்வாறு ஜீவசமாதியில் தியானம் செய்ய சிவராத்திரிவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஆச்சரியமான அதிசயம்!!!

சிவராத்திரியன்று ஏதாவது ஒரு ஜீவசமாதியில் மஞ்சள் துண்டு விரித்து,மஞ்சள் ஆடையை அணிந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,குறைந்தது ஒரு மணி நேரம் வரை மட்டுமே தியானம் செய்தால்,
1.மன உளைச்சல்கள் தீரும்;
2.குடும்பத்தில் இருந்து வந்த பிணக்குகள்,வேதனைகள்,துயரங்கள்,துன்பங்கள்,பாசத்திற்கான ஏக்கங்கள் தீர்ந்துவிடும்.
3.பண ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் தீரத்துவங்கும்;
4.பல பிறவிகளாக நாம் சேமித்து வைத்த பாவங்கள்,நமது கர்மவினைகளாக இன்று வரையிலும் வாட்டி எடுக்கும்;அந்த கர்மவினை எப்பேர்ப்பட்ட மலையளவு இருந்தாலும்,அவை இந்த ஒரே இரவு தியானத்தினால்,கரைந்து காணாமல் போய்விடும்.
5.நாம் செய்துவரும் தொழிலில் இருந்துவரும் மந்தநிலை அடியோடு மாறிவிடும்;
6.ஆன்மீகத்தில் ஓரளவாவது முன்னேற மாட்டோமா? என்ற ஏக்கம் உள்ளவர்கள் விரைவான முன்னேற்றத்தை அடைவார்கள்;தகுந்த குரு இவர்களைத் தேடிவருவார்;
7.தவறான வாழ்க்கையிலிருந்து மீளத் துடிப்பவர்கள்,ஒரே நாளில் அடியோடு திருந்திவிடுவார்கள்.(அவர்கள் சார்பாக,அவர்களின் ரத்த உறவுகளும் இவ்வாறு வழிபாடு செய்யலாம்)    8.நீண்டகாலமாக பல்வேறு பிரச்னைகளால் நீதிமன்றத்துக்கு அலைபவர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.மணவிலக்குப்பிரச்னை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,வீண் பழியால் உண்டான வழக்குகள் என எதுவாக இருந்தாலும்,மனமுவந்து தியானம் செய்தால்,விரைவில் சாதகமான அதே சமயம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.
சரி,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் செய்ய வேண்டியது என்ன?
நெல்லை மாவட்டம் ,சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்திருக்கும் பாம்புக்கோவில் சந்தை என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் மாதவானந்த சுவாமி  ஜீவசமாதிக்கு சிவராத்திரியன்று 20.2.2012 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வந்துவிட வேண்டும்;வரும்போது கண்டிப்பாக மஞ்சள் நிற ஆடை அணிந்து வர வேண்டும்;மஞ்சள் நிற துண்டு,இரண்டு ருத்ராட்சங்கள்,தூங்குவதற்குத் தேவையானவை போன்றவற்றுடன் பின்வரும் பொருட்களை வாங்கி வரவேண்டும்.

1.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
2.விதையில்லாத கருப்பு திராட்சை அரைக்கிலோ
3.பேரீட்சை ஒரு பாக்கெட்
இத்துடன் முடிந்தவரையிலும் நெய்,உங்களால் முடிந்த காணிக்கையைக் கொண்டு வர வேண்டும்.

சரி! யார் இந்த மாதவானந்த சுவாமிகள்?
கேரளாவில் பிறந்த மாதவானந்த சுவாமிகள்,இங்கு மறைந்துநின்று வாழும் மகானாக இருக்கிறார்.இவரது குருவானவர்,இவரிடம் நீ ஜீவ சமாதியாக வேண்டிய இடம்,பாண்டி நாட்டில் இருக்கும் பாம்புகோவில் என்று விளித்திருக்கிறார்.சில ஊர்களுக்குச் சென்றபின்னர்,ரயிலில் பயணித்திருக்கிறார்.அப்போது சங்கரன் கோவிலைக் கடந்ததும், பாம்பு கோவில் என்னும் ரயிலடி நிறுத்தத்தை நெருங்கும் போது,தான் நிரந்தரமாகவும்,சூட்சுமமாகவும் வாழும் இடம் இதுதான் என்பதை அறிந்திருக்கிறார்.இங்கு இருக்கும் வெள்ளைப் பிள்ளையார்கோவிலுக்கு வந்து தங்கியிருக்கிறார்.அங்கு இருப்பவர்களிடம்,தான் இந்த தேதியில்,இந்த நேரத்தில் ஜீவசமாதியாகப் போகிறேன்;நீங்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அவர்கள் இவரது வார்த்தையைக் கண்டுகொள்ளவில்லை;பிறகு,அந்த வெள்ளைப் பிள்ளையார் கோவில் பூசாரியான வெங்கட்ராமனிடம் இதே கருத்தைச் சொல்ல,அவரோ,மாதவானந்த சுவாமிகளை கேலி செய்திருக்கிறார்.
உடனே,மாதவானந்த சுவாமிகள்,பூசாரி வெங்கட்ராமனின் கையைப் பிடித்தவாறு,அவரது குடும்பத்தில் நிகழ்ந்த அத்தனை ரகசியங்களையும்,அவரது மூன்று ஜன்மங்களையும் விவரித்திருக்கிறார்.ஆச்சரியத்திலும்,அதிர்ச்சியிலும் உறைந்திருக்கிறார் பூசாரி வெங்கட்ராமன்!!!
பூசாரி பாம்புகோவில் கிராமத்துக்குச் சென்று,மாதவானந்த சுவாமிகளைப் பற்றி விவரிக்க,ஜீவசமாதியாவதற்கான ஏற்பாடுகள் துரிதமாயின;உரிய நாளில்,அந்த ஜீவசமாதிக்கு மேலே வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது;தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இவ்வாறு சிறிதும் ஓய்வில்லாமல்,வேறு எங்கும் செல்லாமல்,பறந்து,மூன்றாம் நாளில் ஜீவசமாதியில் உயிரை விட்டது;அந்த கருடனுக்கும் மாதவானந்த ஜீவசமாதியோடு சேர்த்து,ஒரு ஜீவசமாதி எழுப்பப் பட்டது.இவ்வாறு நடைபெற இருப்பதை,மாதவானந்த சுவாமிகள் முன் கூட்டியே பாம்புகோவில் மக்களுக்கும்,ஆன்மீக அன்பர்களுக்கும் தெரிவித்துவிட்டார்.இந்த தெய்வீக அதிசயம் கி.பி.1964 இல் நிகழ்ந்தது.சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர்,இந்த ஜீவசமாதி புனரமைக்கப்பட்டது;அப்போது பூமியைத் தோண்டும்போது,மாதவானந்த சுவாமியின் மேல் கால் பகுதி வெளிப்பட்டது;அந்த மேல்காலானது,ஜொலிக்கும் தங்கமாக இருந்ததை பலர் நேரில் பார்த்துள்ளனர்.தற்போது திரு.மணி என்பவர் இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியைப் பராமரித்து வருகிறார்.இது தவிர,இந்த பாம்புக்கோவில் பகுதியில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் ஜீவசமாதிகளின் உறைவிடமே ஆகும்.அவை தகுந்த நேரத்தில் வெளிப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஏராளமான ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதிகளில் மாதவானந்த சுவாமி ஜீவசமாதி முதன்மையானது ஆகும்.
பாம்புக்கோவில் சந்தையானது மதுரை செங்கோட்டை ரயில் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது.சங்கரன் கோவிலுக்கு அடுத்ததாக அமைந்திருக்கிறது.காலை 7 மணிக்கு மதுரைக்கு நேரடியாக ரயில் வசதி இருக்கிறது.பேருந்தில் பயணிக்க விரும்புவோர்,மதுரை- ராஜபாளையம்- தென்காசி மார்க்கத்தில்,புளியங்குடியில் இறங்கி ஆட்டோ பிடித்து வரலாம்.மினி பஸ் வசதி ஓரளவு மட்டுமே உண்டு.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ