RightClick

மனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு


மாயா,மாயா எல்லாம் மாயா; என்ற பாபா திரைப்படத்தின் பாடல்வரிகள் யுகம் யுகமாக மனிதர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கும் மாயையைப் பற்றியே விளக்குகிறது.உலகம் தோன்றியதே மாயையால் தான் என வேதாந்திகள் சொல்வர்.ஆண் பெண் என்று இரண்டு இனம் உருவாக்கப்பட்டதிலிருந்தே மாயையும் சூட்சுமமாகத் தோன்றிவிட்டது.நாம் மனிதனாக இருந்து செய்யும் பாவ புண்ணிய செயல்கள் ஒவ்வொன்றையும் சூட்சுமமாக அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.யாருக்குமே தெரியாமல் ஒரு பாவம் அல்லது புண்ணியத்தை நாம் செய்தாலும்,அது இந்த அஷ்ட திக் பாலகர்களின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது.இதற்கான தண்டனை தான் நமது ஜன்மச்சனி மற்றும் அஷ்டமச்சனி காலத்தில் நம்மைத் தேடி வருகிறது.நாமோ, எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது? என்று புலம்புகிறோம்.


விண்ணுலகில் வாழ்ந்து வரும் தேவர்கள்,அசுரர்கள்,வானவர்,கின்னரர்,கிம்புருடர்,வித்யாதரர்,   சாரணர்,யட்சர் மற்றும் கந்தர்வர்கள் முதலான சூட்சுமதாரிகள் கூட மாயையினால் அவதிப்பட்டுவருகின்றனர்.திரிலோக சஞ்சாரியான நாரதமகரிஷியும் மாயையினால் படாத பாடு பட்டிருக்கிறார்.உலகில் உள்ள நம் அனைவரையும் ரதி மன்மதன் தான் ஆட்டுவிக்கின்றனர்.மாயையில் சிவமாயை,விஷ்ணு மாயை என்று இருவித மாயை உண்டு.மோகினி என்னும் பெண் தேவதைதான் இதில் பிரதானமாக செயல்படும்.மாயையிலிருந்து சிவனாலும்,விஷ்ணுவாலும் விடுபடமுடியாது.சிவன் என்பது இங்கு ருத்ரன் ஆகும்.(நம்மை நிர்வாகிக்கும் மும்மூர்த்திகள் பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆவர்.ருத்ரனையும் சிவனையும் நாம் ஒரே கடவுள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.அது தவறு.இந்த மும்மூர்த்திகளையும் நிர்வாகிப்பவரே சிவபெருமான் ஆவார்.இந்த சிவபெருமானின் ஆலயமே அண்ணாமலை ஆகும்.இவரை மாயை கட்டுப்படுத்தாது.)

மாயைக்குக் கட்டுப்படாதவர் விநாயகர் மட்டுமே!விநாயகர் உபாசனை; பின்னர் சரியை,கிரியை,யோகம்,ஞானம்,பக்தி என்று எந்த வழியில் போனாலும் மாயையில் சிக்க மாட்டார்கள்.விநாயகர் உபாசனை மாயையை விட கூடுதல் சக்தியுடையது.காணபத்தியன் (விநாயகரின் வழிபாட்டை மேற்கொள்பவர்)பக்கம் மாயை நெருங்கிட முடியாது;

விநாயகர் உபாசனை செய்யாமல் வாலை பூஜை,புவனை வழிபாடு,திரிபுரை,ஆஞ்சனேயர் உபாசனை,முருகக்கடவுள் பக்தி என உபாசனை செய்தவர்கள்  மாயையில் சிக்கி கேவலப்பட்டனர்.இன்றைக்கு ஏராளமான அருளாளர்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றமடைவது எப்படி? என்பது தெரியாமல் திண்டாடுகின்றனர்.இவர்கள் அனைவரும் விநாயகர் உபாசனை செய்தால் மட்டுமே மாயையின் தாக்குதலில் இருந்து மீள முடியும்.
நாடாளும் மன்னனாக இருந்த விஸ்வாமித்ர மகரிஷியானவர், தவத்தை மோகினி வடிவமெடுத்து கெடுத்தது மேனகை.அப்பேர்ப்பட்ட மகரிஷியையே இந்திர உலகத்தினர் மேனகையை அனுப்பி கெடுக்கும்போது,கலிகாலத்தில் வாழும் நாமெல்லாம் எம்மாத்திரம்?


நாம் விஷ்ணு வழிபாடு செய்தாலும் சரி;பிரத்யங்கரா வழிபாடு செய்தாலும் சரி; நமக்குத் தெரிந்த சாமியார்கள், துறவிகள்,பூசாரிகள் திடீரென பெண்ணால் அவமானப்படுவதற்குக் காரணம் இவர்கள் அனைவரும் முதலில் விநாயகர் வழிபாடு செய்யாததே!


சரி! எவ்வளவு காலமாக விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்? 

குறைந்தது ஓராண்டு வரையிலும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருந்தாலே போதும்.ஒரு சில மாதங்களில் நமது கனவில் விநாயகர் வருவார்.நம்மை ஆசிர்வாதிப்பார்.அதுவரையிலும் எப்போதும் எங்கும் எந்த சூழ்நிலையிலும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.


இதை எனக்குப் போதித்த  புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்