RightClick

வருவார்களா அடியார்கள்?
வாழுகின்ற வாழ்க்கையில் வருகின்ற சோதனைகள் பல; வாட்டம் தீர்க்க நாம் மதிக்கும் பெரியவர்கள்,அடியார்கள்,ஆன்மீகவாதிகள் நம் இடம் தேடி வந்து ஆறுதல் சொன்னால் எப்படி இருக்கும்?
எனது தெருவில் வாராவாரம் ஒரு பாதிரி வந்து பைபிள் ஓதி ஆசி வழங்கிச் செல்வதைப் பார்த்தேன்.அவர்கள் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள்.

ஏன் இந்து தர்மத்தை விட்டு மதம் மாறினீர்கள்? இப்படி மதம் மாறிப்போனால்,நமது வழிவழியான தர்மம் என்னாகும்? என கேட்டதற்கு அவர்கள் சொன்னது:
குடும்பத்தில் பல கஷ்டங்கள்,பல சிக்கல்கள்; கோயில் கோயிலாகச் சென்றோம்.பிரச்னைகள் தீரவில்லை;பாதிரி வந்தார்.உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்றார்.உங்கள் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன்(?!) என்றார்.

நமக்காக,நம் குடும்பத்திற்காக எங்கிருந்தோ வந்தவர்,வெள்ளை அங்கியால் உடல்மூடி,கண் மூடி, ‘பரமபிதாவே! எங்களை ரட்சிப்பாயாக!’ எனக் கூக்குரலிட்டு கூவி அழைக்கும் நபரல்லவா நாங்கள் தேடியது.

யார் ஆறுதல் கொடுத்தார்கள்? எந்த சாமியார் எங்களுக்காக பிரார்த்தனை செய்தார்? எந்த சொந்தம் என் கடனுக்காக வருத்தப்பட்டது? இதுநாள் வரை எங்களுக்கு யாராவது ஆறுதல் சொன்னார்களா? அதனால் மனம் மாறினோம்! மதம் மாறினோம்!! மகிழ்ச்சியாக இருக்கிறோம்!!! என்றனர்.

கேட்ட எனக்கு மனம் கல்லாகிப்போனது.நமது இந்து மதத் துறவிகள் மக்களுக்காக இறங்கிவந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்! உடனே செயல்படுத்த முடிவு செய்தோம்.

கோவை பிரஸ் காலனியில் ஸ்ரீவாராஹி ஆஸ்ரமத்தில் இருக்கும் வணக்கத்துக்குரிய ஸ்ரீவாராஹி மணிகண்ட சுவாமிகளை அணுகி நிலையைச் சொல்லி செயல்படுத்த வேண்டினோம்.மகிழ்வோடு சம்மதித்தார்.எப்போதுவேண்டுமானாலும் மக்கள் மத்தியில் வர நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீவிவேகானந்தா நகர்.இது தலித்துகள் வாழும் பகுதி.அவர்களின் வீடு தோறும் சென்று சுவாமிகள் விளக்கேற்றி வைத்து ஆசி வழங்க வேண்டும் என முடிவு செய்தோம். எப்படி இருக்குமோ வரவேற்பு என எண்ணியபடியே வீடு வீடாகச் சென்று சொன்னோம்.ஸ்ரீமணிகண்ட சுவாமிகள் உங்கள் வீடு தேடி வந்து விளக்கேற்றிவைப்பார்கள்.விருப்பம் உள்ளவர்கள் அழைத்துக்கொள்ளுங்கள் என்று!

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.நாதஸ்வர இசையுடன் மாலை 7 மணிக்குப் புறப்பட்டு வீடுதோறும் சென்றபோது,ஒவ்வொரு வீட்டிலும் ஆண்,பெண் குழந்தைகள் என அத்துணை பேரும் சுவாமிகளை வரவேற்று ஆசி பெற்றார்கள்.

இதில் உச்சகட்ட ஆச்சரியம் என்னவென்றால்,இந்துக்கள் வீடுகளுக்குச் சென்றபோது நடுவில் இரண்டு வீடுகள் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தன.அங்கு போக வேண்டாம் என நினைத்து அந்த வீடுகளைக் கடந்த போது அந்த வீட்டுக்காரர்கள் வழிமறித்து, ‘ஏன் சுவாமி எங்களை தவிர்த்துப் போகிறீர்கள்? எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்!!!’ என வரவேற்று,திருக்குட நீரால் பாதம் கழுவி வீட்டிற்குள் அழைத்துச் சென்று விளக்கேற்றினார்கள்.நள்ளிரவு 2 மணியாயிற்று.200 வீடுகளில் விளக்கேற்றி நிறைவு செய்ய!!!

ஐயா துறவிகள் அடியார்கள் இப்படி வருவார்களா? வந்தால் மதமாற்றம்,மனமாற்றம், இந்துமத துஷ்பிரயோகம் அனைத்தும் அழிந்துவிடுமே! வாருங்கள் அடியார்களே!! மக்களை சந்திப்போம்!!!

நன்றி:விஜயபாரதம் , பக்கம் 22,9.9.2011