RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனப்பெருமாள்,ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கும் முன்பேயிருக்கும் 50,000 ஆண்டு பழமையான கோவில்அகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர். அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி, இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில் கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல் செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.
அவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள். அங்குறை வடபத்திர சயனரே இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர் தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால் வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது. திருவேங்கடவன் என எல்லோரும் போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள். விஷ்ணு சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை நாச்சியாரை எடுத்து வளர்த்தார். அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும் காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி வந்தார்.ஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை கடிந்து கொண்டார். அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’ என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் விளங்கிற்று. இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.இங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே தரிசித்தால் திருஷ்டி நீங்கும். கபால பீடை அகலும் என்பது கண் கண்ட உண்மை. இங்குள்ள விமானம் சம்சண விமானம், தேவர்களுடன் சிவனும் வந்து வணங்கும் விமானம் என்கிறது விஸ்வாமித்ர நாடி.

‘‘தேவருடனே முக்கண் மூர்த்தியும்

முயன்று தொழுமிவ் விமானமது

சம்சணமே’’ & என்ற பாட்டால் தெரியலாம்.

பஞ்ச லோகத்தால் ஆன சக்கரத்தாழ்வாருக்கு எதிரில் விஜயவல்லித் தாயாரின் ஸ்வரூபம். அக்னி, பயம், காத்து, கருப்பு, பேய், பிசாசுகளின் பிடியிலிருந்து நிவாரணம் பெற ஓடி வருவீர் இத்தலத்திற்கு என்கிறார் அகஸ்தியர்.‘‘எழுந்தோடி வருவீர் வடபத்திர சயனங்கண்டு நிற்ப முடியாதது என் இவ் வையத்தே’’ & நம்மாழ்வார் அவதரித்த இந்த தலத்தை தென்புதுவை என்றும் வட

மகாத்மபுரம் என்றும் ஸ்ரீதன்வபுரி என்றும் போற்றுகின்றனர். முன்னைய மன்னர்கள், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று வர்ணித்தனர்.

ஆண்டாள் ‘திருப்பாவை’ என்ற தமிழ் வேதத்தை ஓதிய தலம். ஸ்ரீகிருஷ்ணன், ரங்கமன்னாராக

கருடன் மேல் வந்து ஆண்டாளை விவாகம் செய்த தலம். இந்த புண்ய க்ஷேத்திரத்தில்தான் பெரியாழ்வாருக்கு தனது கல்யாண கோலத்தைக் காட்டினார் திருமால். அவர் எப்படி தரிசித்தாரோ அதை அப்படியே ஓவியமாக தீட்டினார் பெரியாழ்வார். பின் பாண்டிய, சோழ மன்னர்களால் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் சிற்பங்களுடன் கோயில் அமைந்தது.தமிழக அரசு முத்திரையில் கம்பீரமாக காட்சி அளிப்பது இந்த வடபத்திரசாயின் ராஜகோபுரமே. இந்த கோயிலுக்கு அனுதினமும் தும்புரு நாரதர், பிரம்மா, சனக ரிஷி, கந்தர்வர்கள், சந்திரன், கின்னர மிதுரர்கள், சூரியன் என யாவரும் வந்து ஹோயாளி பூஜை (விடிவெள்ளி தோன்றுகையில் செய்யும் பூஜைக்கு ஹோயாளி பூஜை என்று பெயர்) செய்து தத்தம் இடம் சேருகின்றனர். எடுத்த காரியம் ஜெயம் பெற, நல்ல புத்திரர்கள் உண்டாக, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வியில் முன்னேற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, வடபத்திர சாயியை பதினெட்டு பௌர்ணமியன்று விரதம் இருந்து, மாலை வேளையில் தொழுது வந்தால்

வேண்டியன சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

‘‘நாடிய பொருள் கைகூடும் கல்வியும் மேன்மையும் உண்டாம் எண்ணியவாறு மணமுமீடேறும்; கொடிய பிணி கருகும். கடனுபாதை போம் &ஆயுளுமாங்கு பலமாகு மய்யன் வடபத்திரன் முழுமதி முயன்று மூவாறு திதி தொழுபவர்கே!’’
 
thanks: D.Lingam,our favourite reader