RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகள்-3சரணாகதி தத்துவம் என்பது இந்துதர்மத்தில் இறைவழிபாட்டில் இருக்கும் ஒன்று.கேட்கும் வரமெல்லாம் தரும் ஒரு கோவிலும்,கடவுளும் அமைந்துவிட்டால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை;அப்படிப்பட்ட ஒரு கோவிலாக ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி கோவில் அமைந்திருக்கிறது.

கடவுளையே சந்தேகப்படும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.ஏனெனில்,ஏமாற்றுவது பெரும்பாலான மக்களுக்கும்,ஜோதிடர்களுக்கும்,சாமியார் வேஷத்திலிருப்பவர்களுக்கும் இயல்பு சுபாவமாக இருக்கிறது.அவர்களிடமெல்லாம் ஏமாந்துவிட்டு,இவர்களையும் நம்மையும் படைத்த கடவுளையே நம்பாமலிருப்பதும்,கடவுளின் பெருமைகளை உணர்ந்தவர்கள் சொல்லும்போது,அதை நாம் கேலி செய்வதும் இன்று வழக்கமாக இருக்கிறது.

நாம் நம்முடைய முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த திமிரான காரியங்கள்,அகம்பாவமான அட்டுழியங்கள்,பணத்திமிர்,கல்வித்திமிர்,அரசியல் செல்வாக்கினால் செய்யும் அட்டகாசங்கள் எல்லாமே நம்மை இந்த ஜன்மத்தில் திருப்பித்தாக்கும்.அதுவும் கலிகாலமாக இருப்பதால் காமம் சார்ந்த அவமானங்கள்தான் பெரும்பாலானவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது.இதைப் பற்றி விரிவாக எழுதினால்,ஆன்மீகக்கடல் காமக்கடலாகிவிடும்.இந்த ஒரு வரியிலேயே நமக்குள் புதைந்திருக்கும் சோகங்களை உணர்ந்துகொள்வோம்;இப்படிப்பட்ட சோகங்கள் நீங்கிட மாதம் ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியை பவுர்ணமிபூஜையன்று வழிபட விடிவு கிடைக்கத்துவங்கும் என்பது அனுபவ உண்மை!!!

சீனிவாசன் என்பவர் நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது அறிமுகமானார்.அப்போது வருடம் 2006 என நினைக்கிறேன்.ஒரு நாள் அவர் என்னை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.அது எனக்கு மதிய உணவு நேரம் என்பதால்,நிதானமாக அவரது பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து,கணக்கிட்டு அவரைப்பற்றி சுமார் இரண்டு மணிநேரம் ஜாதகபலன்களை விவரித்தேன்.அப்போது அவருக்கு அஷ்டமத்துச்சனி நடந்துகொண்டிருந்தது.ஒரு குறிப்பிட்ட காலத்தை(சுமார் மூன்று மாதங்கள்)க் குறிப்பிட்டு,இந்த கால கட்டத்தில் உங்களுக்கு வாகனத்தால் உயிருக்குச் சமமான கண்டம் உண்டாகும்;இருப்பினும் நீங்கள் தப்பித்துவிடுவீர்கள் என விளக்கினேன்.

இந்த சம்பவம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தன.நான் இந்த ஜோதிடக்கணிப்பை மறந்தே போனேன்.திடீரென ஒரு நாள் சீனிவாசன் எனது வீடு தேடி வந்து,அவரது காரில் என்னை அழைத்துச் சென்றார்.அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று,தனது கையாலேயே எனக்கு உணவு பரிமாறினார்.அவரது வீடு மூன்று கூடங்களாக இருந்தன.வீட்டில் யாரும் இல்லை;பெரும்பாலும் நான் எவரது வீட்டிலும் சாப்பிடுவது கிடையாது.அவரது கட்டாயத்தால்,என்னால் அதை எதிர்க்க  முடியவில்லை;சாப்பிட்டு முடித்ததும்,அவர் சொன்னது என்னைத் திகைக்க வைத்தது.

அவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்.ஒரு டாக்டரை அவரது குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பும்போது, விருதுநகர் மாவட்டத்துக்குள் நுழைந்ததும்,ஒரு நூற்பாலைக்கு அருகில் வேகமாக வந்த லாரியால் விபத்து அதிகாலையில் ஏற்பட்டிருக்கிறது;விபத்தில் டாக்டர் குடும்பத்தினர் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு விதத்தில் ரத்தகாயம் அடைந்தனர்.ஆனால்,இவரோ ஒரு காயமும் படாமல் தப்பித்திருக்கிறார்.இவரது காரோ இரண்டாகப் பிளந்திருக்கிறது.சட்டரீதியான,காவல் ரீதியான நடைமுறைகளை முடித்துவிட்டு,ஒரு மாதம் கடந்து எனது நினைவுகளும்,நான் சொன்ன இறைவழிபாட்டைச் செய்து வந்ததையும்,அதனால்,அவர் விபத்திலிருந்து தப்பித்ததையும் நினைத்து அவருக்கு பெருமை தாங்க வில்லை;அதனால்தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க வேண்டியதாகிவிட்டது ;கட்டாயப்படுத்தியமைக்கு மன்னிப்பும் கோரினார்.எனக்கு எனது அன்னை பத்திரகாளிதான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதன் பிறகு,அவர் தினமும் காலை 8 மணிக்குள் எனது வீட்டுக்குத் தினமும் வரத்துவங்கினார்.அவர் ஸ்ரீவில்லிபுத்தூரின் வடக்கு எல்லையில் ஒரு தெருவில்  குடியிருந்தார்.நானோ,ஸ்ரீவில்லிபுத்தூரின் கிழக்கு எல்லையில் இருக்கும் கடைசித் தெருவில் வாழ்ந்து வந்தேன்.
அவரது பழைய ஸ்கூட்டரில் என்னை ஒரு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு,என்னை அனுப்பிவைத்துவிட்டு,புறப்படுவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.நான் தினமும் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.என்னைத் தேடி வராதீர்கள் என்று பலமுறைகூறியும் கேட்பதாக இல்லை;

ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குப் புறப்படும்போதும்,பக்கத்துத் தெருவில் இருக்கும் பத்திரகாளியம்மாளின் கோவிலுக்குப் போய் அன்னையை வழிபட்டப்பின்னரே,புறப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.எனது தெருவுக்கும்,பத்திரகாளி கோவில் இருக்கும் முதலியார்பட்டித்தெருவுக்கும் நடுவே சிவகாசி ரோடு செல்கிறது.

சீனிவாசன் அண்ணன் அந்த ரோட்டின் ஓரத்தில் இருக்கும் ஒரு டீக்கடையில் நின்று கொண்டு போய்விட்டு வாருங்கள் என்பார்.நானும் பத்திரகாளியை தரிசனம் செய்தபின்னரே,அவரது ஸ்கூட்டரில் அமர்ந்து,பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வேன்.இப்படியே பல மாதங்கள் சென்றன.

ஒரு நாள்,சீனிவாசன் அண்ணன் என்னிடம் கேட்டார்.ஆமா,இந்த தெருவுக்குள் போகுறீங்களே! எங்கதான் போறீங்க என்று கேட்டார்.
எங்கம்மாவைப் பார்க்கப் போகிறேன்.நீங்களும் வாங்க என்றேன்.தினமுமா உங்கம்மாவைப் பார்ப்பீங்க என்றார்.ஆமாம்.எங்கம்மா பத்திரகாளியைப் பார்த்துவிட்டுத்தான் வேலைக்கே போவேன் என்றேன்.அவருக்கு ‘புரிந்தது’.
அது ஒரு வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன்.அன்று ஸ்கூட்டரில் நான் அமர்ந்ததும்,சீனிவாசன் அண்ணன் கேட்டார்:நானும் உங்க அம்மாவைப் பார்க்க வரலாமா?

“இனிமேல் பத்திரகாளி நம்ம அம்மா! தாரளமாக நீங்களும் வாருங்கள்” என்றேன்.

இருவரும் பத்திரகாளியம்மாளின் கோவில் வாசலில்(முதலியார்பட்டித்தெருவின் மையப்பகுதியில்) இறங்கினோம்.கோவில் இருக்கும் சந்துக்குள் நுழைந்தோம்.

கோவில் வாசலை எட்டும்போது,கோவிலுக்குள்ளிருந்து ஒரு சிறுவன்(சுமார் 12 வயதிருக்கும்) வேகமாக ஓடி வந்தான். ‘பொன் மகள் வந்தாள்;பொருள் கோடி தந்தாள்’ என்ற சினிமாப் பாடல் வரிகளை சத்தமாகப் பாடியவாறு ஓடிப்போனான்.சீனிவாசன் அண்ணன் முகத்தில் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி தென்பட்டதைக் கண்டேன்.எனக்கோ,ஒரு ஆழ்ந்த சிந்தனை தோன்றியது.பாட்டு சிவாஜிகணேசன் பாட்டு.இதை எப்படி 12 வயது சிறுவன் பாடுகிறான்? என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.அடுத்த சில நாட்களில் அந்தப் பாடல் ரீ மிக்ஸ் என்பதும்,அதை நடிகர் விஜய் நடித்த சினிமாவில் வந்திருக்கிறது என்பதையும் கண்டறிந்தேன்.
அன்றிலிருந்து,அவரது விவாகரத்து வழக்கில் நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்ததை பிற்பாடு விவரித்தார்.அன்று மாலை அவரது வழக்கறிஞர் முதன்முறையாக அவரிடம் மரியாதையாகவும்,எதார்த்தமாகவும் பேச ஆரம்பித்தார்.அவரது விவாகரத்து வழக்கின் இறுதி முடிவு எப்படி இருக்கும்? என்பதையும் அன்றே விவரித்தார்.அன்று இரவுதான் சீனிவாசன் அண்ணன் நிம்மதியாகத் தூங்கினார்.இதை அவரே மறு நாள் காலையில் எனது வீட்டுக்கு வரும்போது சொன்னார்.

ஒன்பது மாதங்கள் கடந்தன;செவ்வாய் கோட்சாரப்படி 45 நாட்கள் நீசமாகத்துவங்கியது.சீனிவாசன் அண்ணன் செவ்வாயின் ராசிகளான மேஷம்/விருச்சிகம் ராசிகளில் ஒன்றில் பிறந்தவராக இருந்ததால்,அவரிடம் ஜோதிட எச்சரிக்கையை விவரித்தேன்.

“அண்ணே,இன்றிலிருந்து 45 நாளுக்கு அதாவது இத்தானம் தேதி வரையிலும் யார் உங்களை அவமானப்படுத்தினாலும்,அவர்கள் பக்கம் நியாயமிருந்து உங்கள் மீது பழிவிழுந்தாலும்,அடக்கி வாசிங்க.மீறினால்,வரும் சிக்கல்கள் இன்னும் பல பிரச்னைகளை உங்களுக்கு உருவாக்கிவிடும்”

22 ஆம் நாளில் இவரது விவாகரத்து வழக்கு இறுதிகட்டத்தை எட்டியது.அப்பா,அம்மா இல்லாதவராக இருந்த இவருக்கு இரண்டு அண்ணன்கள்,இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள்.இவர்களில் ஒரு அக்காவுடன் வாழ்ந்துவருகிறார்.திருமணத்தரகர் ஏமாற்றி இவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர்.இவரது மனைவியோ பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவிக்கு தாம்பத்திய சுகம் தரும் தகுதி பிறவியிலேயே கிடையாது.இவரது மனைவியின் பெற்றோர்கள்,இவரது வசதியான வீடு,வேலையை புரிந்துகொண்டு,பெண் கொடுத்த கையோடு இவரது சொத்துக்களை அமுக்கிவிட திட்டமிட்டிருந்தனர்.ஆனால்,வெறும் 15 நாளிலேயே இவரது மனைவி தனது தாயாரின் வீட்டுக்குப் போனவர்,வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.சுமார் எட்டு ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடைபெற்றது.

இந்நிலையில் இவரது தரப்பு கருத்தை அறிய அன்று நீதிமன்றத்தில் கூண்டில் ஏறினார்.கருத்து கூறிவிட்டு,இறங்கியதும்,பெண்ணின் அம்மா,பெண்ணின் அத்தை இருவரும் இவரை அடிக்க கோர்ட் வளாகத்திலேயே பாய்ந்தனர்.அந்த நேரத்தில்,இவருக்கு நான் சொன்ன ஜோதிட எச்சரிக்கை ஞாபகத்துக்கு வந்தது.உடனே,அவர் தனது சட்டைப்பையில் வைத்திருந்த பத்திரகாளிகோவில் மஞ்சள் காப்பை தனது நெற்றியில் பூசினார்;அதற்குள் இவரது மனைவியின் அம்மாவும்,அத்தையும் இவரை அடிக்க நெருங்கிவிட்டனர்;இவரோ கோர்ட் வளாகத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தார்.கோர்ட் வளாகம் மொத்தமும் இவரது ஓட்டத்தையும்,அந்தப் பெண்களின் கோபத்தையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

அடேய்,அயோக்கியப்பயலே,எம் பொண்ணுக்கு அஞ்சு லட்சம் குடுடா ராஸ்கல் என்று திரும்பத் திரும்ப கத்திக்கொண்டே சீனிவாசன் அண்ணனைத் துரத்திட,இவரோ சுமார் மூன்று முறை கோர்ட் வளாகத்தை சுற்றிவந்துவிட்டார்.இந்த பரபரப்பில் விஷயம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்குத் தெரிய வர,சீனிவாசன் அண்ணனின் எதிர்தரப்பு வக்கீலுக்கு செம திட்டு விழுந்தது.உடனே,அந்த வக்கீலும் ஓடோடிச் சென்று,தனது தரப்பு பெண்களை சமாதானப்படுத்தினார்.

அடுத்த மூன்று மாதங்களில் இவருக்கு விவாகரத்துத் தீர்ப்பு கிடைத்தது.அதுவும் எப்படி? ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லை என்ற வரிகளில் அவரது ஆச்சரியத்துக்கு அளவே இல்லை;அவரும் தினமும் ஸ்ரீபத்திரகாளியம்மாளின் கோவிலுக்கு வர ஆரம்பித்துவிட்டார்.

இதுபோல இன்னும் ஏராளமான சம்பவங்களில் பத்திரகாளியின் அருளை நாம் ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வாசிக்கப் போகிறோம்.

ஓம்ஹ்ரீம்மஹாபைரவாய நமஹ