RightClick

திருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன?

திருஅண்ணாமலை கிரிவலம் நமக்கு உணர்த்துவது என்ன?
நீங்கள் திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது உங்களைப்பொறுத்தவரையில் சாதாரண சம்பவம்;ஆனால்,உங்களை வரவழைப்பதற்காக உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து இந்த தெய்வீக நல்வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளனர்.

நமக்கு ஒரு ஆன்மீககுரு இந்தப்பிறவியில் அமைந்துவிட்டால்,நமது 3000 முந்தைய மனிதப்பிறவிகளாக சிறிதுசிறிதாக புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே பொருள்.இந்தப்பிறவியிலேயே நமக்கு குரு அமைய வேண்டும் எனில்,வியாழக்கிழமைகளில் கிரிவலம் சென்று கொண்டேஇருக்க வேண்டும்.

முதன்முறையாக திருஅண்ணாமலை கிரிவலம் செல்லும்போது சிலருக்கு நடைபயணம் கடுமையாக இருக்கும்;பலருக்கு நடைபயணம் சுலபமாக இருக்கும்.கிரிவலத்தின்போது எக்காரணம் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்;அந்தப்பாவத்தை எங்கேயும் கொண்டுபோய் கரைக்க முடியாது.

கிரிவலம் செல்வதற்கு ஏற்ற நாட்கள் பவுர்ணமி என நம்புகிறோம்.அதைவிடவும் அமாவாசையும்,அதைவிடவும் மாத சிவராத்திரியும் மிகச்சிறந்ததாகும்.கிரிவலம் செல்லும் முறைகள் மட்டுமே 1,00,008 முறைகள் இருக்கின்றன.அவற்றில் ஒரு சில முறைகளைத்தவிர,மற்றவைகளை நம்மால் பின்பற்றுவது பிரம்மபிரயத்தனம் ஆகும்.

தற்காலத்தில்தான் கிரிவலப்பாதையின் நீளம் 14கிலோ மீட்டர்கள்.சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு 54 கிலோ மீட்டர்களாகவும்,சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு 80 கிலோ மீட்டர்களாகவும் இருந்திருக்கின்றன.

எந்த வித பக்தியும் இல்லாமல்,சும்மா ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டு அண்ணாமலை கோவிலுக்குள் செல்லாமல் நேராக நமது வீட்டுக்குச் சென்றாலே கிரிவலம் சென்றதற்கான புண்ணியம் கிடைத்துவிடுகிறது.ஒரே ஒரு கிரிவல விதி என்ன வெனில்,கிரிவலத்தை எந்த இடத்திலிருந்து துவங்கினோமோ,அதே இடம் வரை கிரிவலம் சுற்றிவந்தால்தான் கிரிவலம் முழுமை பெறும்.

உதாரணமாக,குபேரகிரிவல நாளன்று குபேரலிங்கத்தில் ஆரம்பித்து,குபேரலிங்கத்தில் கிரிவலப்பயணத்தை முடிக்க வேண்டும்.தற்காலத்தில்,பவுர்ணமிநாட்களில் பேருந்தினை கோவிலிலிருந்து ஓரிரு கிலோ மீட்டர்கள் தூரத்திலேயே நிறுத்திவிடுகிறார்கள்.ஆக,அந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து கிரிவலம் புறப்பட்டு,அதே இடத்தை வந்தடைந்தாலே கிரிவலம் முழுமை பெற்றதாக அர்த்தம்.
கார்த்திகை மாதம் வரும் பவுர்ணமியான திருக்கார்த்திகையன்று,திரு அண்ணாமலையிலிருந்து சில கிலோ மீட்டர்கள்தூரத்திலேயே பேருந்தை நிறுத்திவிடுகிறார்கள்.ஆக,கூட்டத்தில் கரைந்துபோகும் நாம் எந்த இடத்தில் கிரிவலப்பாதையைத்  தொடுகிறோமோ,அந்த இடமே கிரிவலத்தின் ஆரம்பமுனையாக நினைத்து,கிரிவலம் சுற்றி அதே இடத்தில் முடிக்க வேண்டும்.இது பாவம் அல்ல;இதைத்தான் அருணாச்சலபுராணம் விவரிக்கிறது.அருணாச்சலபுராணத்தில், “எங்கு கிரிவலம் ஆரம்பிக்கிறோமோ,அதே இடத்தில் முடிக்க வேண்டும்”.

சித்திரைமாதம் வரும் பவுர்ணமியன்று,திருஅண்ணாமலையின் கிழக்குக் கோபுரத்தில் இருந்தவாறே பசு நெய்,தாமரைத்தண்டுத்திரியினால் அகல்விளக்கு ஏற்றி அதை உயர்த்திப்பிடித்து, தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து கிரிவலம் துவங்க வேண்டும்.கிரிவலத்தின் போது புனிதமான பூக்களை தானமளித்து,பூத நாராயணர் திருக்கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.வசதியுள்ளவர்கள் 12 விதமான உணவுவகைகளை தானமளித்தவாறு கிரிவலப்பயணம் மேற்கொள்ளுவது நன்று.
அவையாவன:1.எலுமிச்சை சாதம்
            2.சர்க்கரைப் பொங்கல்
            3.மாங்காய் சாதம்
            4.தேங்காய் சாதம்
            5.புளியோதரை
            6.தயிர்ச்சாதம்
            7.அவல் உப்புமா
            8.அரிசி உப்புமா
            9.கோதுமை உப்புமா
           10.கறிவேப்பிலை சாதம்
           11.வெண் பொங்கல்
           12.பருப்புச் சாதம்


வைகாசி மாதப் பவுர்ணமியன்று  கிரிவலம் வருவதால், சனி தசை,புக்தி,மகாதிசை காலங்களில் ஏற்படும் துன்பங்களுக்குத் தக்கப் பரிகாரங்கள்கிடைத்துவிடும்.

முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை,பதவி உயர்வு,பணி அந்தஸ்து கிடைத்துவிடும்;

சுவாசம் சார்ந்த நோய்கள் விலகும்;

பல காலமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை மனதால் நினைத்து வேண்டிட வேண்டும்.முடிந்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்திடல் வேண்டும்.இதனால்,பாவம் நீங்கிவிடும்.

ஆனிமாத பவுர்ணமியன்று செல்வத்தின் அதிபதி கிரிவலம் வருகிறார்.எனவே,செல்வச் செழிப்பை விரும்புவோர்,ஆனிபவுர்ணமிகிரிவலம் வருவது நன்று.இந்த ஆனிமாத பவுர்ணமியன்று பிருங்கிமுனிவரின் தோளில் அமர்ந்து குபேரபகவான் கிரிவலம் வருவதாக ஐதீகம்.எனவே, இம்மாதகிரிவலம் செல்வோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றை தோளில் வைத்து கிரிவலம் சென்றால்,16 செல்வங்களும் குழந்தைபாக்கியமும் கிடைக்கும்.
பேரக்குழந்தையை  அல்லது உறவினர்/நண்பர்களின் அனுமதியோடு அவர்களின் ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வரவேண்டும்.

இன்று முழுவதும் வில்வ இலை ஊறிய நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருந்து ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தையை தோளில் சுமந்து கிரிவலம் வர சகல சம்பத்துகளும் உண்டாகும்.சிலருக்கு குபேரபகவானின் தரிசனமும் கிட்டும்.

உங்கள் குழந்தைகள் பருவ வயதில் தடம்மாறிச் சென்றுவிட்டார்கள் எனவருந்துகிறீர்களா? ஆனிமாத பவுர்ணமியன்று கிரிவலம் நீங்கள் வந்தால் உங்களது குழந்தைகள் மனம் மாறி நல்லொழுக்கத்துடன் வாழத்துவங்குவர்.

சிலர் தமது வயதான பெற்றோர்களை கவனிப்பதில்லை;சொத்தினை அடாவடி செய்து பிடுங்கி,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது உண்டு;அல்லது வீட்டை விட்டு துரத்தி விடுவதும் உண்டு.பெற்றோர்கள் கடும்மன வேதனையடைந்தால் அது பித்ரு தோஷமாக மாறி சீரான வாழ்க்கையை சீர்குலைத்துவிடும்.இதற்கு பிராயசித்தமாக ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் செல்வது அமைந்திருக்கிறது.


தைமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்றால்,உங்கள் குழந்தைகளின் மந்தகுணம் மாறும்;கல்வியில் கவனம் செலுத்தி பொறுப்புள்ளவர்களாக மாறுவார்கள்.இதற்கு நீங்கள் உங்களுடைய குழந்தைகளுடன் கிரிவலம் வர வேண்டும்,

12 தை பவுர்ணமிகளுக்கு தைமாத பவுர்ணமிகிரிவலம் வந்து,அப்படி வரும்போது கிரிவலப்பாதையில் கீரை வடையை தானம் செய்தால்,சிறுவயதில் உங்களைவிட்டு காணாமல் போன உங்களுடையரத்த உறவு தானாகவே தேடிவரும்.

பிரண்டை துவையல் கலந்த சாதத்தை தைமாத பவுர்ணமியன்று கிரிவலம் செல்லும்போது அன்னதானமாக அளித்து வந்தால்,தடம் மாறிப்போன கணவன் அல்லது அப்பா மனம் மாறி தீயஒழுக்கங்களைக் கைவிட்டு,பொறுப்புள்ள குடும்பஸ்தராக மாறிவிடுவார்.

நமது எந்த வித பூர்வஜன்ம கர்மவினையாக இருந்தாலும் பவுர்ணமி கிரிவலம் அதை கரைத்துவிடும்.

மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால் அதிலிருந்து மீளமுடியும்.
கலப்படம் செய்வதையே தொழிலாக வைத்திருப்போர்,பிறருடைய சொத்துக்களை அபகரித்திருப்போர்,அலுவலகப் பொருட்களை வீட்டில் பயன்படுத்துவதால் குடும்பத்தலைவரின் அல்லது குடும்பத்தலைவியின் ஆயுள் குறையும்;அதே சமயம் வீட்டுக்கடன் அதிகரிக்கும்;அதை தீர்க்கமுடியாது.இதுபோன்ற பாவங்களை நிவர்த்திசெய்ய மாசிமாத பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்.

மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்த்தால்,உங்களுடைய பல நூறு மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.

பங்குனி மாதம் வரும்பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் விஷேசமானது ஆகும்.
உங்களுக்கு நிரந்தரமான நிம்மதியான செல்வ வளம் கிடைக்க வேண்டுமெனில்,ஏராளமான சம்பங்கிப்பூக்களை சுமந்தவாறு,கிழக்குக்கோபுர வாயில் நிலைப்படியில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரை தரிசித்துவிட்டு,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்ததரிசனத்திற்கு லட்சண திருமுக தரிசனம் என்று பெயர்.இந்தத் தரிசனம் நம்மை தூய செல்வத்திற்கு சுத்திகரிக்கும்தரிசனம் ஆகும்.அதன் பிறகு,மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்.

எமலிங்கத்தின் அருகில் இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும்.இயலாவிட்டால் எமதீர்த்தத்தை தலையில் தெளிக்கவேண்டும்;சம்பங்கிப்பூக்களால் எமலிங்கத்தை அர்ச்சனை செய்து பிரசாதமாக அதே சம்பங்கிப்பூக்களை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு,எமலிங்கத்தின் வாசலில்நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்குஒளதும்பர தரிசனம் என்றுபெயர்.இந்த தரிசனம்,நமக்குக்கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப்பெறவைக்கும்.அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும்.

கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலதுபுறம்திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர்.இந்த  தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால்,பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.


குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர்.அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும்.

தொடர்ந்து வந்து,பூதநாராயணப்பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.பூதநாராயணப்பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப்பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும்,திருஅண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.


இப்படி இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் முறை
கிரிவலம் செல்ல வேண்டும்.இப்படி செய்தால்,மாபெரும் செல்வ வளம் உங்களைத்தேடி வரும்.

நன்றி:திருஅருட்பவுர்ணமியில் திருஅண்ணாமலைகிரிவலம்தரும் பலன்கள்,படைப்பு:குருமங்கள கந்தர்வா ஸ்ரீ ஆர்.வி.வெங்கட்ராமன் அவர்கள்,விலைரூ.50/-
கிடைக்குமிடம்:ஜெய்ஸ்ரீ அகத்திய பப்ளிகேஷன்ஸ் பி லிட்,20,டயமண்ட் ஜீப்ளிபில்டிங்,மயிலம்,திருச்சி8.