RightClick

நமபுங்கள் நாராயணன்:ஈ.எஸ்.பி.+ ஜோதிடர்

நம்புங்கள் நாராயணன் ! - எஸ்.ரஜத்

,ராமநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு, அவரது சொந்த ரைஸ் மில்லில் இயந்திரத்தை ரிப்பேர் செய்யும் போது, சுவரில் தலை மோதி பலத்த அடிபட்டது. மூன்று நாட்கள் நினைவின்றி, கிட்டத்தட்ட கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டார்.


மருத்துவமனையில் இவரது படுக்கை அருகே, பேசிக் கொண்டிருந்த டாக்டர், "நாளைக்கு இவருக்கு தலையில் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்...' என்று சொன்னார். அவர்கள் பேசுவதைக் கேட்ட அந்த இளைஞர், "நாளைக்கு எனக்கு ஆபரேஷன் நடக்காது...' என்றார். "ஏன்?' என்று கேட்டதற்கு, "இன்று இரவு இரண்டு மணிக்கு நீங்கள் இறந்து விடுவீர்கள்!' என்றார். ஏதோ உளறுகிறார் என்று சட்டை செய்யாமல் டாக்டர் சென்று விட்டார்.


ஆனால், இளைஞர் குறிப்பிட்டபடி, இரவு இரண்டு மணிக்கு அந்த டாக்டர் இறந்துவிட்டார். கோமா நிலையிலிருந்து உடல் குணமான அந்த இளைஞருக்கு, இ.எஸ்.பி., அதாவது, எக்ஸ்ட்ரா சென்சரி பர்செப்ஷன் என்ற அதிசய சக்தி வந்தது.


அந்த இளைஞர் தான் பின்னர் ஜோதிடம், நியூமராலஜி இரண்டிலும் சிறப்பு பெற்று, 1971 முதல் 2010ம் ஆண்டு வரை புகழ் பெற்ற எண் கணித மேதையாக, பல லட்சம் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தினராலும் நன்கு அறியப்பட்ட, "நம்புங்கள் நாராயணன்' ஆக சிறப்பாக வாழ்ந்தவர்.


கடந்த ஜூன் 8ம் தேதி காலமான நம்புங்கள் நாராயணன் பற்றி, அவரது மனைவி நாராயணியும், அவரது மூன்று மகள்களில் இளையவரான காயத்ரியும் நினைவு கூர்கின்றனர்...


இவரது தந்தை என்.ராமகிருஷ்ணய்யர், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் ஹைஸ்கூலில் கணித ஆசிரியர். டாக்டர் அப்துல் கலாம் எழுதிய, "அக்னி சிறகுகள்' புத்தகத்தில், ராமகிருஷ்ணய்யரின் கணித திறமை பற்றியும், அவர் பயிற்றுவிக்கும் விதம், கண்டிப்பு போன்றவைகளைப் பற்றி பாராட்டி எழுதி, அவர் புகைப்படத்தையும் வெளியிட்டு, தன் ஆசிரியரை கவுரவித் திருக்கிறார் அப்துல் கலாம்.


படிப்பு முடித்ததும், சென்ட்ரல் மரைன் பிஷெரிஸ் இன்ஸ்டிடியூட் என்ற மத்திய அரசு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, தன் 58 வயது வரை தொடர்ந்து அங்கு பணியாற்றி, அங்கேயே கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார் நம்புங்கள் நாராயணன். நிறுவனத்திடமிருந்து முறைப்படி அனுமதி பெற்று மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் அப்போதே ஜோசியம் பார்த்து வந்தார்.


கடந்த 1990ல் ஓய்வுபெற்ற பிறகு, ரொம்ப ரொம்ப பிசி ஆகிவிட்டார்.


நிறுவனங்களுக்குப் பெயர் வைக்கவோ, பெயரை மாற்றவோ பல தொழிலதிபர்கள் இவரை கன்சல்ட் செய்வர். ஜோதிடம், நியூமராலஜி இரண்டின் அடிப்படையில் பெயர் குறித்துக் கொடுப்பார். நியூக்ளியஸ் சாப்ட்வேர் என்ற நிறுவனம், "போலாரிஸ்' என்ற பெயர் பெற்று, வெற்றிகரமான நிறுவனமானது. அதன் மானேஜங் டைரக்டர் அருண் ஜெயின், இவரை அடிக்கடி கன்சல்ட் செய்வார். விவேக் அண்ட் கோவிற்கு புதிய எம்பளம் (லோகோ) இவர் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது. பெஸ்ட் ஹாஸ்பிடல், தங்கபாலுவின் மெகா, "டிவி' போன்று, பல நிறுவனங்களுக்கு பெயர் சூட்டியுள்ளார்.


தனி நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய இவர் சொல்வதில்லை. வீட்டில் பெற்றோர், பெரியவர்கள் வைத்த பெயரை மாற்றாமல், அந்தப் பெயரிலே ஸ்பெல்லிங், எழுத்து சேர்த்து, குறைத்து வைக்க ஆலோசனை சொல்வார். 240 நாட்களுக்கு புதுப்பெயரை எழுதிப் பார்க்கச் சொல்லுவார்.


கடந்த நாற்பது வருடங்களாக இவர் ஈடுபட்ட ஹாபி, தபால் தலைகளை சேகரிப்பது. வெளிநாட்டு நாணயங்கள், கரன்சி நோட்டுகளை சேகரிப்பது.


தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., மந்திரி சபை கவிழ்வது உறுதி என்று பிப்., 7, 1980ல் நடைபெற்ற லயன்ஸ் கிளப் கூட்டத்தில், நாராயணன் கூறினார். அதை அலை ஓசை நாளிதழ் வெளியிட்டது. பிப்., 17ம் தேதி, எம்.ஜி.ஆர்., மந்திரி சபை கலைக்கப் பட்டது.


பின்னர், நாராயணனை அழைத்து, "எப்படி சொன்னீர்கள்?' என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்., எந்த அடிப்படையில் தான் அந்த முடிவுக்கு வந்தேன் என்பதை விளக்கமாக சொன்னதும், எம்.ஜி.ஆர்., பாராட்டி, "இனி நாராயணன் சொல்லுவதை நம்பலாம்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


பிறகு, "தாய்' பத்திரிகையில் வாரா வாரம் ஜோதிட பலன்களை எழுத ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர்., பாராட்டியதை நினைவில் கொண்டு ஆசிரியர் வலம்புரி ஜான், "நம்புங்கள் நாராயணன் எழுதும் வார பலன்!' என்று வெளியிட்டார். அப்போதிலிருந்து இவரது பெயர், "நம்புங்கள் நாராயணன்' என்றே பிரபலமானது. பத்து வருடங்கள் வாரா வாரம் வந்தது.


"முக்கிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பதவி பற்றியெல்லாம் இவர் பலன்கள், ஆரூடம் கூறும் போது, எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்; ஒரே டென்ஷன், கவலை. ஆனால், இவருக்கோ சற்றும் பதட்டம் இருக்காது. "நீ ஏம்மா கவலைப்படறே... நான் சொல்வது எல்லாம் கண்டிப்பாக நடக்கும்; சரியாக இருக்கும்...' என்று தைரியமாக சொல்வார்!' என்கிறார் அவரது மனைவி நாராயணி.


இந்திய அரசியல் மற்றும் உலக அரசியலில் பல முக்கிய நிகழ்வுகளை அவை நடப்பதற்கு முன்பாகவே, இவர் கணித்து சரியாக சொல்லியிருக்கிறார். அவற்றை பிரபல பத்திரிகை கள், "டிவி' சேனல்கள் வெளியிட்டுள்ளன.


* அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று ஜூலை 17, 1974ல் இவர் சொன்னார்; ஆக., 8, 1974ல் நிக்சன் ராஜினாமா செய்தார்.


* ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதி யாகவும், மார்க்கரெட் தாட்சர் இங்கிலாந்து பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று


மே 31, 1976ல் கன்னிமாரா ஓட்டலில், ரோட்டரி கிளப்பில் பேசினார்; அப்படியே நடந்தது. மார்க்கரெட் தாட்சர் இவரை பாராட்டி கடிதம் எழுதினார்.


* முன்பு 1977ல் நெருக்கடி நிலைமை நடந்து கொண்டிருந்த சமயம், ஜனவரி 26 முதல் மார்ச் 27ம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தி, இந்திரா காந்தி தோல்வி அடைவார் என்று கூறினார்; அப்படியே நடந்தது.


* கடந்த 2001 தேர்தலில், அ.தி.மு.க., 196 சீட் வாங்கி, வெற்றி பெறும் என்று ஜெயா, "டிவி'யில் இவர் சொன்னது அப்படியே பலித்தது.


* விரைவில் பெரிய பூகம்பம் வரும், நிறைய உயிர்ச்சேதம் ஏற்படும் என்று ஜன., 8, 1980ல்


தி மெயில் நாளிதழில் எழுதினார். இவர் கூறி, நான்கு தினங்களில் அல்ஜீரியாவில் ஏற்பட்ட பூகம் பத்தில் இருபதாயிரம் பேர் மரணம் என்று இந்து நாளிதழ், தலைப்புச் செய்தி வெளியிட்டது.


*அமெரிக்கா, ஈராக் இடையே 2002ல் போர் மூளும் என்று கூறினார்; அதன்படியே, போர் ஆரம்பமானது.


*கடந்த 2004ம் ஆண்டு சுனாமி வருவதை, ஜெயா, "டிவி'யில் வருட ஆரம்பத்திலேயே இவர் குறிப்பிட்டுச் சொன்னார்.


ஜெயா, "டிவி'யில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக எண் கணித பலன்களும், விண் வெளியில் நடக்கும் அதிசயங்கள் பற்றியும் இவர் தொடர்ந்து கூறியிருக்கிறார்.


எம்.ஜி.ஆரின் அழைப்பை அடுத்து, இரண்டு முறை ராமாவரத் தோட்டத்திற்குச் சென்று, எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியிருக்கிறார். அதே போல, போயஸ் கார்டன் வீட்டிற்கும் வரச்சொல்லி வந்த அழைப்பை ஏற்று, ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருக்கிறார்.


இவர் வீட்டிற்கு வந்து சாப்பிடும் அளவு நெருக்கமானவர்கள் சுப்ரமணிய சாமி, ஜெமினி கணேசன் போன்றவர்கள். தொழிலதிபர் டி.டி.வாசு, ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, சரத்குமார், தங்கபாலு, அரங்கநாயகம் உள்பட பலர் இவரிடம் ஆலோசனை கேட்பர்.


"நீங்க மந்திரி ஆவீங்க...' என்று, தங்கபாலு விடம் சொன்னார். மந்திரி ஆனதும், இவரை வீட்டில் வந்து சந்தித்து, வாழ்த்து பெற்றார்.


சென்னை விமான நிலையத்தில், பயணத்திற்கு சென்றிருந்த இவர், அப்போது புறப்படவிருந்த மற்றொரு சஹாரா விமானத்தைப் பார்த்து, "அந்த ப்ளைட் போகாது; அப்படியே போனாலும் திரும்பி இங்கேயே வந்துவிடும்...' என்று விமான போக்குவரத்துத்துறை நண்பரிடம் சொன்னார். அதே போல குறிப்பிட்ட சஹாரா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சஹாரா ஏர்வேசின் அதிபர் சுபர்தோ ராய், இவருக்கு நல்ல நண்பராகி விட்டார்.


சிவசேனா தலைவர் பால் தாக்கரே, இவரை மும்பையில் தன் வீட்டுக்கு அழைத்து ஆலோசனை பெற்றிருக்கிறார். மத்திய அமைச்சர் சரத் பவாரும் இவரை சந்தித்து ஆலோசனை பெற்றிருக்கிறார்.


கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, தன் திருமணம் பற்றி இவரிடம் ஆலோசனை பெற்றார்.


கடந்த 1980ல் துபாயைச் சேர்ந்த ஒரு பணக்கார ஷேக், தன் ஏற்பாட்டில், இவரை துபாய்க்கு நான்கு நாட்கள் தன் பிரத்யேக விருந்தாளியாக வரவழைத்து, தன் எதிர்காலம் பற்றி, ஆலோசனை பெற்றார்.


பல முஸ்லிம் நண்பர்களுக்கு இவர் ஜாதகம் பார்த்து, பலன்கள் சொல்லியிருக்கிறார். பிறந்த தேதி, இடம் இவற்றை வைத்து, ஜாதகம் கணித்து கொடுத்திருக்கிறார்.


தமிழகத்தில் உள்ள பல பிரபல ஜோதிடர்களின் குடும்பத்தினர், தங்கள் எதிர்காலம், பிள்ளை, பெண்களுக்கு திருமணம் பற்றியெல்லாம் இவரை சந்தித்து பேசி, தீர்வு பெற்றுள்ளனர்.


நம்புங்கள் நாராயணன் - நாராயணி தம்பதியினருக்கு மூன்று பெண்கள். சாந்தி கண்ணன், தி இந்துவில் ஸ்பெஷல் கரஸ்பான்டென்ட்; சித்ரா, காயத்ரி இருவரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மூவருமே ஐ.டி., துறை. இவர்கள் மூவரும் சேர்ந்து, தங்கள் தந்தையின் வரலாறு, அவர் சொன்ன கணிப்புகள் ஆகியவற்றை சுவாரசியமான புத்தகமாக வெளியிடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


பிரபல இதய நிபுணர் சாலமன் விக்டர், இவருடைய நெருங்கிய நண்பர். இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறினார் நாராயணன். அதே போல, மூன்று ஆண்டுகள் கழித்து, திருமணமான பதிமூன்றாவது ஆண்டில் அவருக்கு குழந்தை பிறந்தது.


ராஜிவ் - சோனியா மகள் பிரியங்கா, பிரதமராக வருவார் என்று கூறியுள்ளார்; பொறுத்திருந்து பார்ப்போம்.


அவர் இறந்து இரண்டு மாதங்களாகியும் இன்றும் தினமும் பலர் அவரைக் கேட்டு போன் செய்கின்றனர். "இரண்டு, மூன்று மாதம் கழித்து வாங்கன்னு சொன்னாரே...' என்று வருத்தப்படுகின்றனர்.


இவரிடம் வருபவர்களுக்கு எதிர்கால பலன்களுடன், தன்னம்பிக்கை, தைரியம், மனதில் தெளிவு போன்றவைகளை இன்முகத்தோடு அளித்ததாலும், ஜோவியலாக பேசுவதில் வல்லுனராக இருந்தது அவருடைய தனிச் சிறப்பு.