RightClick

உலகமயமாக்கலால் சிதையும் இந்தியசிறுவர் பருவம்

உலக மயமாக்கலால் சிதையும் சிறுவர் பருவம்

இன்று(24.5.2010 திங்கள்) தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பில் 8 ஆம் பக்கத்தில் தடம் மாறும் இளம் ரத்தம் என்ற தலைப்பில் ஒரு முழுப்பக்கக் கட்டுரையை ச.சுப்ரமணியம் மற்றும் ச.இரகுநாதன் எழுதியுள்ளனர்.அதிலிருந்து சில பகுதிகளும்,நமது ஆன்மீகக்கடலின் சிந்தனையும்:
சில வருடங்களுக்கு முன்பு,சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச்சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர்.அவமானத்தால் துடித்த சிறுமி முடிவில் தூக்கில் தொங்கினாள்.
தற்கொலைக்குத் தூண்டியதாக சட்டம் அந்த சிறுவர்களை கைதுசெய்தது.இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்களே.இன்னொரு கொடூர நிஜம் என்னவெனில், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கையின்படி, இளம் குற்றவாளிகள் அதிகரிக்க,இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது.அன்றாடத்தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளைக் கவனிக்கவும்,மனம் விட்டுப்பேசவும் கூட நேரமில்லாத பெற்றோர்கள் எப்படியாவது மூன்றுவேளை சாப்பிட்டால் போதும் என்ற நிலையால் அவர்களை தம் குழந்தைகளின் நிலையைக் கண்டும் காணாமல் இருக்க வைத்துவிடுகிறது.

2008 ஆம் ஆண்டு பதிவுகளின்படி 62.2% வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்.ஆண்டுவருமானம் ரூ.25,000/-க்குக் கீழ் இருப்பவர்களே இளம் குற்றவாளிகளாக உருவாகின்றனர்.
ஆண்டுவருமானம் ரூ.25,000/- முதல் ரூ.2 லட்சம் இருக்கும் குடும்பங்களில் இளம் குற்றவாளிகள் 13.6% உருவாகியுள்ளனர்.
ஆண்டுவருமானம் ரூ.2,00,000/-க்கும் அதிகமாக இருப்பவர்களின் குடும்பங்களிலிருந்து இளம் குற்றவாளிகள் 24.2% உருவாகின்றனர்.
இந்த இளம் குற்றவாளிகளில் பெரும்பாலானவர்கள் தெருவில் வசிப்பவர்கள்.அதாவது பேருந்துநிலையம்,ரயில் நிலையத்தில் வாழ்ந்துவருபவர்கள்.
போலீஸார்களுக்கு “மாதக்கடைசிகேஸ்”ஆகி போலீஸ்காரர்கள் பதவி உயர்வுக்கு இந்த தெருவோரம் வசிப்பவர்களே ‘உதவி’செய்கின்றனர்.பிறகு,போலீஸ்துறையால் இவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
காமம் ரீதியான குற்றங்கள் உருவாக கவர்ச்சிகாட்டும் ஸ்ரேயாக்கள்,சிம்ரன்கள்,அனுஷ்காக்கள்,அசின்கள்,மும்தாஜ்கள்,ஷகீலாக்கள் காரணமாகின்றனர்.நாமும் இதை கண்டும் காணாமலும் அனுமதிக்கின்றன.

அந்த சமூகப்பிரச்னையின் ஒரு சுருக்கம்.


இனி ஆன்மீகக்கடலான நமது சிந்தனை:
ஒரு பெட்டிக்கடை கிராமத்தில் உருவாக்கிட ரூ.50,000/-முதலீடும்,நகரத்தில் உருவாக்கிட ரூ.1,00,000/-முதலீடும்,மாநகரத்தில் உருவாக்கிட ரூ.5,00,000/-முதலீடும் தேவை.இப்படி துவங்கிடும் ஒருபெட்டிக்கடையானது 10 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.இந்த ஆய்வுமுடிவை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வெளியிட்டுள்ளது.

(சுதேசி விழிப்புணர்வு இயக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்தியாவின் தேசிய பொருளாதாரச் சுயச்சார்பை உருவாக்க உதவும் ஒரு பிரச்சார அமைப்பு)
ரூ.2 கோடி ரூபாயை மத்திய அரசு சர்வோதயா அமைப்புக்குத் தந்தால்,சர்வோதயா அமைப்பினால் 200 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கிடமுடியும். இதன்மூலம் 200 குடூம்பத்தை நிரந்தரமாக வறுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.
ஆனால்,நமது மத்திய அரசுகள் என்ன செய்கிறது தெரியுமா?
ஒரு வருடத்துக்கு 7,00,000 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும்(இந்தியாவைத் தவிர்த்து) வருமானம் பார்க்கும் வால்மார்ட் என்ற அமெரிக்க சில்லறை வர்த்தக பூதத்துக்கும்,அதுபோன்ற வர்த்தக பிசாசுகளுக்கும் இந்தியாவை விற்றுவிட்டது.
ஒரு சர்வேப்படி,ஒரு இந்தியன் தனது 60 வயது வாழ்நாளுக்குள் ஒரே ஒரு முறை ஒரு பொருளை (உதாரணம் ஹமாம் சோப் அல்லது பெப்சி அல்லது கேதான் பேன்) வாங்கினாலே அந்த பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துவிடுமாம்.அவ்வளவு பெரிய்ய சந்தை நம்முடைய இந்திய சந்தை.நமது இந்தியச்சந்தையில் நுகர்வோர்கள் தான் ராஜா என எல்லா வணிகப்பத்திரிகைகளும் எழுதிக்குவிக்கின்றன.அது வடிகட்டினபொய்.மேல்நாட்டைச் சேர்ந்த (அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,சீனா,ஜப்பான்,பிரான்ஸ்)பன்னாட்டு நிறுவனங்கள்தான் ராஜா.
ஏனெனில்,ஒரு மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் விலை இந்தியாவில் ரூ6000/- அதே ஆபரேட்டிங் சிஸ்டத்தின் அமெரிக்கவிலை வெறும் ரூ.450/-மட்டுமே.(இந்தியாவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 72 கோடி, அமெரிக்காவின் நுகர்வோர்கள் எண்ணிக்கை வெறும் 25 கோடி)

அதிகமான பயன்பாட்டாளர்கள் இருந்தால் விலையைக் குறைக்க வேண்டும்.ஆனால்,பேராசை அமெரிக்கா இந்தியாவில் மட்டுமே பகாசுரக்கொள்ளையடித்துக்கொண்டே இருக்கிறது.இந்த கொள்ளையைக் கண்டுகொள்ளாமலிருக்க மத்திய அரசின் அமைச்சர்கள்,பிரதமர்,துறைச் செயலாளர்கள் என அனைவருக்கும் அன்பளிப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.


குளிர்பானச்சந்தையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்,பெப்சியும் கோகோகோலாவும் இந்தியாவுக்குள் நுழையும் வரையிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 1000 வட்டார குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருந்தன.இந்தியா முழுக்க சுமார் 1,00,000 வட்டார குளிர்பான நிறுவனங்கள் இருந்தன.இவைகளை பெப்சியும் கோலாவும் அழித்தன;அல்லது விலைக்கு வாங்கின.

ஒரு பெட்டிக்கடையே 10 பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறது என பார்த்தோம்.ஒரு குளிர்பான நிறுவனம் குறைந்தது 100 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பைத் தந்திருக்கும்.அப்படியானால் 1,00,000 x 100=1,00,00,000 (ஒரு கோடி) பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கும்.
4 பேர் கொண்டது ஒரு குடும்பம் எனக் கொண்டால், 4 கோடி குடும்பங்கள் குளிர்பான நிறுவனங்களை நம்பி வாழ்ந்திருக்கும்.இந்த சுயதொழில் மற்றும் சுதேசி(உள்நாட்டு) வாழ்வாதாரத்தை சிதைத்து, 4 கோடி இந்தியக்குடும்பங்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு,1,00,000 இந்திய சிறுதொழில் நிறுவனங்களை கொன்றுவிட்டு, பன்னாட்டு குளிர்பானங்கள் இன்று ஐஸ்வர்யாராய்,டெண்டுல்கர்,அசின்,த்ரிஷாக்களின் கவர்ச்சிவிளம்பரங்களால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கின்றன. நாமும் நமது நடிகை/நடிகர்களின் மூஞ்சிக்காக சிறிதும் சத்தில்லாத இனிப்பும்போதையும் நிறைந்த குளிர்பானங்களை குடித்து நம் உடலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்,இந்தியாவில் 4 கோடி குடும்பங்கள் வறுமைநிலைக்கு வந்துள்ளது எனில்,இந்தியாவின் ஆட்டோமொபைல்,விவசாயம்,கல்வி,ஏற்றுமதி,வணிகப்பயிர்,தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் அன்னிய ஆதிக்கத்தை மட்டும் வளரவைத்து எத்தனை கோடி இந்தியக்குடும்பங்கள் வறுமையின் எல்லையைத் தொட்டிருக்கும்?

ஏன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் மகன்கள்,மகள்கள் ஒருநாளுக்கு மட்டும் பட்டினி கிடந்திருப்பார்களா? நமது நாட்டின் பெருமைகள் தெரிந்திருக்குமா?

அரிசி,பலசரக்கு,காய்கறி,உயிர்காக்கும் மருந்துகள்,அத்யாவசியப்பொருட்கள் இவற்றின் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது;ஆனால்,தனிமனித சம்பளம் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஓரிரு முறை உயருகிறது.பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவிகளின் புத்திசாலித்தனத்துக்கு வேட்டு வைக்கின்றனர் இந்தியாவின் மத்திய அரசுத்துறைகளின் கொள்ளை முடிவுகள் . . . ஓ ஸாரி கொள்கை முடிவுகள்.
இதன் விளைவாக,வேலைவாய்ப்பு சுருங்கி இந்தியாவின்/தமிழ்நாட்டின் குடும்பங்களில் விபச்சாரம் சகஜமாகிவிட்டது.விபச்சாரம் நவீனமாகி பணம் சம்பாதிப்பது ஒரு வெறிபிடித்த கொள்கையாகிவிட்டது.


எனக்குத் தெரிந்தவரையிலும்,
தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் தனது மகனையும்,மகளையும் ‘ நீ என்ன செய்வியோ தெரியாது; ஒரு நாளுக்கு குறைந்தது ரூ.100/- சம்பாதிச்சுட்டு வா.முடியலையா. . வீட்டுக்கே வராதே’ என தனது செல்வ மகன்/மகள்களை மிரட்டி வீட்டைவிட்டு வெளியேற்றும் பெற்றோர்களை நான் நேரில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.
தான் வளர்த்த தனது மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்திற்கு அறிமுகப்படுத்துவதை நேரில் கண்டு நான் அந்த இளைஞர்கள்,இளம்பெண்களின் எதிர்கால நிலையை நினைத்து எனது தூங்காத இரவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.


காரணம் கேட்டால்,என் புருஷன் குடிக்கிறான்.வேலைக்குப் போக மாட்டேங்குறான்.. என பல முறை இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.