RightClick

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.

அரவணைப்பு

ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.

பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள். ஆனால், ஒருநாள் தாய் வெளியூர் சென்றாலும் கூட, அவள் இல்லாமல் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தாய் அவளுக்குச் செய்த கடமைகளைத் தற்போது `தானே செய்ய வேண்டிள்ளதே' என்று எண்ணி வருத்தபடுவாள். தள்ளி இருக்கும் போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.

தியாகம்

பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. தன்னை போல நவீனமாக அம்மா யோசிப்பதில்லை. மதம், சமயம், பக்தி, கருத்துக்கள் என்று பழைய நடைமுறைகளுடனே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதே அவர்களது எண்ணத்திற்கு காரணம்.

புரிந்து கொள்ளுங்கள்

தன்னால் சாதிக்க முடியாததை மட்டும் என் மீது சுமத்துகிறாள் என்று தன் தாயிடம் பருவவயது மகள் குறை காண்கிறாள். ரசனைகள், விருப்பங்கள், தேர்வுகள் இவை ஒவ்வொரு தலைமுறையிலும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் எது நல்ல விஷயமோ அதை கடைபிடித்து வாழ்வதே உத்தமம்.

தாயானவள் தன் காலத்தில் எப்படி முழுமை பெற்று நின்றாளோ, அதேபோல் மகளும் அவள் காலத்தில் முழுமை பெற்று நிற்கும் போது பெருமைபட வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது.

வேண்டாமே `பெரிய மனுஷித்தனம்'

அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள். பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணம் போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான். ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்லாமல் நாமே பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு பெண் பிள்ளைகள் வந்து விடுகிறார்கள். இந்த `பெரிய மனுஷித்தனம்' தேவையற்ற இடைவெளியை அம்மா விடம் ஏற்படுத்தி விடும்.

பிறந்தது முதல் படிப்படியாக வளர்ந்துவரும் தன் பெண்ணின் தேவையை அம்மாவால் புரிந்து கொள்ள முடியாதா?

`உனக்கு ஒண்ணும் தெரியாது? சும்மாயிரு' என்று சொல்லும்போது அம்மா மனதளவில் உடைந்து விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் தான் தாய். அவளை புரிந்து கொள்வதற்கு தேவை, பொறுமை மட்டுமே.