
அரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப் போவதாக அறிவிப்பு
புதுடில்லி:யோகா குரு பாபா ராம்தேவும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். அரசியலை தூய்மைப்படுத்துவதற்காக, 'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கியுள்ளார்.இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் யோகா பயிற்சி அளிப்பதில் புகழ் பெற்றவர் பாபா ராம்தேவ். மன அழுத்தங்களை போக்கும் வகையிலான பல்வேறு யோகா கலைகளை கற்றுத் தருகிறார்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் யோகா முகாம்களை இவர் நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு அரசியல் ஆசை வந்துள்ளது.'ஸ்வபிமான் அபியான்' என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கப் போவதாக இவர் அறிவித்துள்ளார்.ராம்தேவ் கூறியதாவது:அரசியலில் மாசுபடிந்துள்ளது. அதை தூய்மைப்படுத்துவதற்காகவே அரசியல் கட்சியை துவக்கியுள்ளேன். அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.
முதற்கட்டமாக, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ஏழு முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். சரியான, தகுதியான நபரை அடையாளம் கண்டு, அவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துவோம்.
அதே நேரத்தில் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எந்த பதவியையும் ஏற்க மாட்டேன். 300 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான கருப்பு பணம், இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முறையான சட்ட விதிமுறைகளின்படி, இந்த பணம் முழுவதையும் இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து, வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். 2020ம் ஆண்டுக்குள் இந்த பணம் முழுவதையும், நம் நாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும்.
இதுமட்டும் நடந்து விட்டால், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா அசைக்க முடியாத பலம் பெற்று விடும். வல்லரசு நாடாக உருவெடுக்கும்.யோகா பயிற்சி கற்றுக் கொடுப்பவர்கள், அரசியல் ஆசையுடன் செயல்படுவதாக, உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள், எங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்க மாட்டார்கள்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, பணம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மாலைகளை உருவாக்க அவற்றை பயன்படுத்தக் கூடாது.சமீபகாலமாக, சிலர் ஆன்மிகத்தின் பெயரால், சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது கவலை அளிக்கும் செயல். இதுபோன்ற நபர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இவர்களை தண்டிப்பதற்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.
நன்றி:www.dinamalar.com 18.3.2010