RightClick

கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பாட்டி:உபயம் பத்திரகாளியம்மாளின் அருளாசிசிவராத்திரியன்று நடக்கும் ஒரு அதிசயம்

கொதிக்கும் நெய்யில் கரண்டி இல்லாமல்,வெறும் கையால் ஒருவரால் அப்பம் சுட முடியுமா?

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அதை ஒரு அடுப்பில் வைத்து, அந்த நெய் கொதிக்கும்வரையிலும் காத்திருந்து அப்பத்தின் மாவை பிசைந்து தனது கையால் மாவை நெய்யில் போட்டு, மாவு அப்பமாக வெந்ததும்,வெறும் கையால் எடுக்கும் அதிசயம் சுமார் 40 ஆண்டுகளாக ஒரு கோவிலில் நடைபெற்றுவருகிறது.

ஒரு பாட்டி சுமார் 48 நாட்கள் விரதமிருந்து,ஒவ்வொரு சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டுவருகிறார்.அப்படி சுட்ட அப்பங்களை கோயிலில் வாழும் பத்திரகாளியம்மாவுக்கு படையலிட்டு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

இந்த ஒரு சம்பவமே,இந்த கோயிலில் வாழும் அருள்மிகு பத்திரகாளியம்மனின் அருளாற்றலை வெளிப்படுத்தும் சாட்சியமாக இருக்கிறது.

இந்த பத்திரகாளியம்மன் திருக்கோயிலானது தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி றோட்டில் உள்ள முதலியார் பட்டித்தெருவில் அமைந்துள்ளது.சுமார் 1000 குடும்பங்களுக்கு இந்த பத்திரகாளியம்மாள் குல தெய்வமாக இருக்கிறாள்.

இந்த முதலியார்பட்டித்தெருவில் கைத்தறி நெசவு செய்பவர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.இந்தக்கோவிலில் 7 அடி உயர புற்று ஒன்று இருக்கிறது.நெசவாளர்கள் வாழும் வீடுகளுக்கு மத்தியில் இந்தக்கோவில் இருக்கிறது.ஒரு சிறிய கல்யாண மண்டபமும் இந்தக்கோயிலுடன் இணைந்து இருக்கிறது.

(இந்தக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும் பவுர்ணமிபூஜையைப் பார்ப்பதற்கே காண கண் கோடி வேண்டும்.ஏனெனில்,இந்த பூஜையை விளக்கிட ஒரு வலைப்பூ பத்தாது.

இந்த பத்திரகாளியம்மாள் செய்யும் அதிசய அருள் விளையாட்டுக்களைச் சொல்ல ஒருநாள் போதாது.)

திருவாதிரை,சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகு மகா திசை நடப்பவர்களுக்கும் ஏற்படும் கடுமையான துயரங்களானது இந்த பத்திரகாளையை நேரில் வந்து வழிபட ஆரம்பித்ததும் தீர ஆரம்பித்துவிடுகிறது என்பது அனுபவ உண்மை.

இது தவிர, பிற ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்; பிற திசா புக்தி நடப்பவர்கள் வந்து வழிபடத்தொடங்கியதும் நிம்மதியாக வாழத்துவங்குகின்றனர் என்பதை நேரில் கேட்டறிந்தே இந்த வலைப்பூப் பகுதியை எழுதத்தூண்டியது.

இந்தக் கோயிலுக்கு வந்து சென்ற அன்றைக்கே

நீங்கள் ஒரு அதிசய சம்பவம் நடப்பதை உணர்வீர்கள்.உதாரணமாக, ஒரு தம்பதி! அவர்களுக்கு இரண்டு மகள்கள்!!! மூத்த மகளின் வயது 6.இரண்டாம் மகளின் வயது 2.மிக சாதாரண குடும்பம்.கணவன் கடும் உழைப்பாளி! ஆனால் அப்பாவி.இந்த கணவனுக்கு 4 அண்ணன்கள்.ஆனாலும் யாரும் உதவுவதில்லை;இந்த கணவன் ஒரு சுய தொழில் ரூ.50,000/- கடன் வாங்கி ஆரம்பித்தார்.ஒரே வருடம் தான்.அனுபவமில்லாததால் தொழிலை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.வேலைக்குப் போக ஆரம்பித்தார்.இவரது சம்பளம் வட்டி கட்டவே சரியாக இருந்தது.

இதுவரை இல்லத்தரசியாக இருந்த இவரது மனைவி குடும்பச்செலவுக்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.கடனை அடைக்க வழிதெரியவில்லை; இருவரும் தமது பெற்றொர்களிடம் கடன் கேட்டனர்.கிடைக்கவில்லை.

யாரோ இவர்களிடம் இந்த பத்திரகாளியம்மனைப்பற்றி சொல்ல ஒரு நாள் மட்டும் இந்த கோவிலுக்கு சென்றனர்.கோவிலுக்குபோய்விட்டு, வீட்டிற்கு வந்ததும்,மனைவியின் அப்பா இவர்களின் வீட்டின் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார்.

‘இந்தாம்மா! ரூ.50,000/-போய் உன் கடனை அடை.நீ எனக்கு வட்டி தர வேண்டாம்.எப்ப முடியுமோ அப்போ அசல் தொகை ரூ.50,000/- தந்தால் போதும்’எனக்கூறியவாறு பணத்தைக் கொடுத்தார்.அவர்களுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்!!! திக்குமுக்காடிப்போனார்கள்.

இன்று தினமும் அந்த மனைவி பத்திரகாளியை வழிபட்ட பின்பே தினசரிக்கடமைகளைத் துவக்குவது வழக்கம்.இந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் தம்பதியினர் ரூ.72,000/- சேமித்துவிட்டனர்.

இன்னொரு நிஜக்கதையையும் சொல்ல விரும்புகிறேன்.ஒருவர் டெய்லர் கடை வைத்திருக்கிறார்.ஆனால்,அவரது ராசியோ என்னவோ,ஒரு இடத்தில் ஒரு ஆண்டுக்கு மேல் எங்கேயும் கடையை நடத்த முடியாத சூழல்.

இவர் சுமார் 11 வருடமாக இந்த பத்திரகாளியை தினமும் வழிபட்டு வருகிறார்.இந்த பத்திரகாளியை வழிபட ஆரம்பித்ததும், கடையை மாற்றும் சூழ்நிலை வந்ததும், வேறிடத்தில் இடம் கிடைத்துவிடும்.

இந்த பத்திரகாளியை வழிபடும் முன், இதற்கு மாறாக கடையை மாற்றி சில வாரங்கள் வரை வீட்டிலேயே கடைவைக்கும் கஷ்டமான சூழல் இருந்தது.

தற்போது, இவருக்கு நிரந்தரமான கடை அமைந்திருக்கிறது.இவரது டெய்லர் கடை ஒரு பிரபலமான ஜவுளிக்கடையின் எதிரிலேயே அமைந்துவிட்டது.இப்போது இவர் மிகவும் பிஸியான டெய்லராகி விட்டார்.இவ்வளவு பிஸியான டெய்லரானாலும், ஒரு நாள் விடாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித்தெரு அருள்மிகு

பத்திரகாளியம்மாளை வழிபட்டப்பின்னரே கடையை திறக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.

ஒருவர் அரசு ஊழியர்!இவர் ஒரு கிராம நிர்வாகத்தின் அரசு ஊழியராகப் பணிபுரிகிறார்.இவரது மேல் அதிகாரியாக ஒரு பெண்மணி மாறுதலாகி இவரை நிர்வகிப்பவராக வந்தார்.இந்த பெண் அதிகாரிக்கு சுமார் 50 அரசு ஊழியர்களையும்,கிராம நிர்வாகங்களையும் ஆய்வு செய்யும் பணி இருக்கிறது.

இந்நிலையில் அரசு ஊழியர் தினமும் பத்திரகாளியை 40 கி.மீ.தூரம் பயணித்து வழிபடுவதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், தனது ஆய்வுக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பது பெண் அதிகாரியின் சுபாவமாக இருக்கிறது.

ஒரு நாள்,இந்தப் பெண் அதிகாரி ஆய்வுசெய்வதற்காக அரசு ஊழியரின் கிராமப்பகுதிக்கு வந்தார்.அரசு ஊழியருக்கு இவ்வளவு தொகை கொடு.அதுவும் நாளைக்கே கொடு என மிரட்டிவிட்டுப்போய்விட்டார்.மறுநாளும் வந்தது.அரசு ஊழியர் பத்திரகாளியம்மாளை வழக்கம்போல நேரில் வந்து வழிபட்டார்.தனது இக்கட்டான சூழலை நினைத்து மனமுருகி பிரார்த்தனை செய்தார்.அரசு ஊழியர் தனது அலுவலகம் சென்றதுமே கேள்விப்பட்ட முதல் செய்தியே அந்தப்பெண் அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம் வந்துவிட்டது என்பதே!!!

இதுபோன்ற பல நூறு சம்பவங்கள் இந்த பத்திரகாளியம்மாளை தினமும் வழிபடுவதால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.அந்த சம்பவங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.விரைவில் நமது ஆன்மீகக்கடலில் அவை வெளிவரும்.

நீங்களும் நாளை சிவராத்திரியன்று வருக! நிம்மதியும் செல்வ வளமும் மிக்க வாழ்வு பெறுக!!!

முகவரி:

அருள்மிகு பத்திரகாளியம்மாள் திருக்கோவில்

முதலியார் பட்டித்தெரு

சிவகாசி ரோடு, ஐந்துகடை பஜார் அருகில்

ஸ்ரீவில்லிபுத்தூர்-626125.

விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு.

இந்த வலைப்பூவின் மேற்பகுதியில் இருப்பது அருள்மிகு பத்திரகாளியம்மாளின் திருமுகமே!!!